காந்தி பிறந்த நாளை விடுமுறையில் இருந்து நீக்கிய கோவா அரசு. எதிர்க்கட்சிகள் கண்டனம்.

gandhiகோவாவில் தற்போது ஆட்சி பொறுப்பை நடத்தி வரும் பாரதிய ஜனதா கட்சியின் அரசு, நேற்று முன் தினம் இந்த ஆண்டிற்கான விடுமுறை தினங்களை அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த விடுமுறை நாள் பட்டியலில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2ஆம் தேதி விடுபட்டிருந்ததால், அம்மாநில மக்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால், அது தட்டச்சில் ஏற்பட்ட தவறு என்றும், வேண்டுமென்றே செய்யப்பட்டது அல்ல என்றும் கோவா மாநில முதல்வர் லஷ்மிகாந்த் பார்சேகர் கூறியுள்ளார்.

கோவா அரசின் இந்த முடிவு குறித்து காங்கிரஸ் கட்சி விடுத்த அறிக்கை ஒன்றில், “இது தேசத்துக்கு எதிரான நடவடிக்கை. இதுபோன்ற முடிவு எடுக்க மாநில அரசுக்கு உரிமை இல்லை. எனவே, உடனடியாக பட்டியலை திருத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.

கோவா மாநில சுயேச்சை எம்.எல்.ஏ.வான விஜய் சர்தேசாய் கூறுகையில், “லண்டனில் மகாத்மா காந்தியின் சிலை திறக்கப்பட்ட அதே நாளில், நம் நாட்டில் பாஜக ஆளும் கோவாவில் விடுமுறைப் பட்டியலில் இருந்து அவரது பிறந்த நாள் நீக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. இதுதான் பாஜகவின் நாகரீகமா? என்று கேள்வி எழுப்பினார்.

இந்த பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்ப போவதாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சாந்தாராம் நாயக் கூறினார்.

மகாத்மா காந்தி பிறந்த நாளை விடுமுறையில் இருந்து நீக்கிவிட்டு கோட்சேவின் பிறந்த நாளை விடுமுறை தினமாக பாஜக அரசு அறிவிக்க முடிவு செய்துள்ளதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி காட்டமாக கூறியுள்ளது.

Leave a Reply