தொண்டையை பாதுகாக்க 10 வழிகள்

p19a

1. பேசிக்கொண்டே சாப்பிடும்போது, சில நேரங்களில் உணவானது உணவுக் குழாய்க்குப் போகாமல், காற்றுக் குழாய்க்குப் போய்விடும். இதுவே புரையேறுதல். எனவே, சாப்பிடும்போது பேசக் கூடாது.

2. தொண்டை வழியாக இரைப்பைக்கு வந்த உணவு, வால்வு சரியாக வேலை செய்யாமல்போனால், மறுபடியும் மேலே வரும். இதைத்தான் நெஞ்சு எரிச்சல் என்போம். உணவை வேகவேகமாக விழுங்கக் கூடாது. தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். அதிகக் காரம், அமிலம் மற்றும்  மசாலா உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

3 .அவசர அவசரமாகச் சாப்பிடுவது, தண்ணீர் அருந்தாதது போன்ற காரணங்களால் விக்கல் ஏற்படுகிறது. சிலருக்குத் தண்ணீர், பழச்சாறு குடித்தால் விக்கல் நிற்கும். அமைதியாக உட்கார்ந்து, ஐந்து நிமிடங்கள் மூச்சை ஆழமாக இழுத்து வெளியே விட்டால், விக்கல் நிற்கும். இரண்டு நாட்களுக்கு மேல் விக்கல் இருந்தால், நோய்த்தொற்று, இரைப்பைப் புண் இருக்கலாம். மருத்துவரிடம் காட்ட வேண்டும்.

4. மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற செயல்களால், தொண்டைப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். புகை மற்றும் மது அருந்தும் பழக்கத்தை, உடனடியாக நிறுத்த வேண்டும்.

5. உண்ணும்போது நம்மை அறியாமலேயே, சில சமயம் காற்றும் உள்ளே போகும்.  இந்தக் காற்றானது வாய் வழியே, வெளியேறுவதே ஏப்பம். அளவுக்கு மீறும்போது இதுவே வாயுப் பிரச்னையாகிவிடும். அடிக்கடி ஏப்பம் வந்தால், வயிற்றுப் புண், அஜீரணம், அமில காரத்தன்மை அதிகமாதல் போன்றவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம். எனவே, மருத்துவரை அணுக வேண்டும்.

6 .வைரஸ் தொற்று ஏற்பட்டு சளி, இருமலால் தொண்டையில் வலி, வறட்சி ஏற்படுவதைத் தொண்டைக் கட்டு என்கிறோம். குரலுக்கு ஓய்வு தருவது, நீர் ஆகாரங்கள் அருந்துவது, வெந்நீரில் உப்பு போட்டுக் கொப்பளிப்பது ஆகியவற்றின் மூலம் நிவாரணம் கிடைக்கும். இது தொடர்ந்து இருந்தால், தொண்டையில் சதை, கட்டி இருக்கலாம். மருத்துவரைப் பார்ப்பது அவசியம்.

7. தொண்டையில் இருந்து காற்று வெளியேறுவதில் தடை ஏற்படுவதால் உண்டாவதுதான் குறட்டை.  உடல் பருமன், மூக்கின் தண்டுப் பகுதி மற்றும் எலும்பில் ஏற்படும் குறைபாடு ஆகியவற்றின் காரணமாக குறட்டை வரும்.  மருத்துவ ஆலோசனை பெற்று, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வதன் மூலம், குறட்டைப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

8. அதிகக் குளிர்ச்சி, அதிக சூடு தொண்டையை பதம்பார்த்துவிடும். மிதமான சூடுள்ள உணவுகள், பானங்களே, தொண்டைக்குப் பாதுகாப்பு.

9. புகையிலை மெல்வதால், தொண்டையில் உள்ள திசுக்கள் பாதிக்கப்படும். புகையிலையை எந்த வடிவிலும் உட்கொள்ளக் கூடாது.

10. குழந்தைகள் அடிக்கடி தொண்டை வலியால், உணவை விழுங்க முடியாமல் மிகவும் கஷ்டப்படுவர். கழுத்துப் பகுதி வீக்கம், தொண்டையில் உள்ள டான்சில் சதை வீங்குவது இதற்குக் காரணம்.  பாக்டீரியா தொற்றினால் இது ஏற்படுகிறது.  ஐஸ்க்ரீம், குளிர்பானங்களைத் தவிர்த்து, வெந்நீரில் உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிக்கலாம். வைட்டமின் சி நிறைந்த பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.

Leave a Reply