ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினர் அவ்வப்போது அதிர்ச்சி தரும் செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது 2000 வருடம் பழமையான தேவாலயம் ஒன்றில் இருந்த சிலுவையை அகற்றிவிட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் கொடியை வைத்துள்ளனர். இதனால் கிறிஸ்துவர்களின் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈராக்கில் உள்ள பழமையான நகரங்களில் நிம்ருத் மற்றும் ஹாத்ரா ஆகிய நகரங்களும் உள்ளன. நேற்று நிர்முத் நகரில் உள்ள தேவாலயங்களை கடுமையாக சேதப்படுத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அதன்பின்னர் ஹாத்ரா நகரில் உள்ள 2000 வருடம் பழமையான தேவாலயம் ஒன்றின் மேல் பொருத்தி வைக்கப்பட்டிருந்த சிலுவையை பெயர்த்து எடுத்துவிட்டு அந்த இடத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் கருப்பு நிற கொடியினை பொருத்தியுள்ளனர். இந்த புகைப்படங்கள் உலகம் முழுவதும் இணையத்தில் வெளியாகி பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மேற்கண்ட இரு நகரங்களிலும் இருந்த தேவாலயங்களில் வைக்கப்பட்டிருந்த வண்ண வண்ண ஓவியங்களை சுத்தியலால் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே கடந்த மாதம் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான வரலாற்று சின்னங்களை ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினர் அழித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.