மாதவிலக்கு சமயத்தில் சாக்லெட், வெல்லம், சர்க்கரை, பேரீட்சை, கரும்பு, வேர்க்கடலை, ஸ்வீட்ஸ், பப்பாளி, அன்னாசி போன்றவற்றைச் சாப்பிட்டால், ரத்தப்போக்கு அதிகமாகும் என்பது பெரும்பாலான பெண்களின் கருத்து. உண்மையில் இந்த வகை உணவுகள் ரத்தப்போக்கை அதிகப்படுத்துமா? மகப்பேறு மருத்துவ நிபுணர் ரஷிதா பானு விளக்குகிறார்.
“சினைமுட்டைப் பை முதிர்ச்சியடைந்து, அதில் உள்ள கருமுட்டை முதன்முறையாக வெளியேறுவதே பூப்பெய்துதல். ஒரு பெண்ணின் வாழ்நாளில் சராசரியாக, 400 முறை கருமுட்டை வெளியேறி, மாதவிலக்கு சுழற்சி (Menstrual cycle) நடைபெறுகிறது. கரு, வளர்ச்சி பெறுவதற்காக கர்ப்பப்பை தன்னைத் தயார்ப்படுத்தும். கரு உருவாகவில்லை எனில், தயாரிப்புக்காகச் செய்யப்பட்டவற்றையும், கருமுட்டைகளையும் கர்ப்பப்பை வெளியேற்றும். இதையே மாதவிலக்கு என்கிறோம்.
இந்த மாதவிடாய் சமயத்தில் சிலருக்கு அதிக ரத்தப்போக்கு இருப்பதற்கு பி.சி.ஓ.டி, ஹார்மோன் பிரச்னைகள், ஊட்டச்சத்துக் குறைபாடு, ரத்த சோகை, உடல் பருமன், உடல் உழைப்பு இன்மை போன்றவை காரணமாக இருக்கலாம்.
பப்பாளி, அன்னாசி போன்ற பழங்களில், வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் உள்ளன. மேலும், இதில் உள்ள நார்சத்துக்கள் மலச்சிக்கலைப் போக்கும். ஆகையால், இவை உடலுக்கு நன்மையே தவிர, ரத்தப்போக்கை அதிகரிக்காது. சிலருக்கு இந்த மாதிரியான உணவுகளைச் சாப்பிட்டதும் ரத்தபோக்கு அதிகரித்தால், அதற்கு உணவு காரணம் அல்ல. வேறு சில பிரச்னைகள் இருக்கலாம். எனவே, அவர்கள் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லது.
பொதுவாக 28-35 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வரும். 3-7 நாட்கள் வரை ரத்தப்போக்கு இருப்பது நார்மல். அதற்கு மேல் நீடித்தால், மருத்துவரை அணுக வேண்டும். அதிக இனிப்புகள், துரித உணவுகளைச் சாப்பிடுவதால், உடல்பருமனாகி பி.சி.ஓ.டி (PCOD) போன்ற ஹார்மோன் பிரச்னைகள் ஏற்பட்டு, அதிக ரத்தப்போக்கு வரலாம் என்பதற்காக, இனிப்புகளை அதிகம் உண்ணக் கூடாது என்பார்கள். துரித உணவுகளைத் தவிர்த்து, அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுக்கும், அதிக ரத்தப்போக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை.
தீர்வு
1.அதிக நீர்ச்சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள், கீரைகள், பால், அசைவம் போன்ற உணவுகளைச் சமச்சீரான அளவில் சாப்பிடலாம்.
2.மாதவிலக்கு சமயத்தில், சிலருக்குச் சோர்வு ஏற்படலாம். அவர்கள் உடற்பயிற்சி மற்றும் ஆசனங்கள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.