வெளிமாநில தொழிலாளர்களை வேலைக்கு சேர்க்கும் நிறுவனங்களுக்கு புதிய உத்தரவு.

 laboursதமிழகத்திற்கு வேலைக்காக வரும் வெளிமாநிலத் தொழிலாளர்களிடம் கண்டிப்பாக கைரேகையை பெறவேண்டும் என வேலை வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு தமிழக போலீஸார் புது உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு சமீபகாலமாக வெளிமாநிலத்தில் இருந்து அதிகளவான தொழிலாளர்கள் வேலைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் பெருநகரங்களில் உள்ள ஓட்டல்கள், தொழிற்சாலைகள், குவாரிகளில் பணிபுரிந்து அதிக ஊதியமும் பெற்று வருகின்றனர்.

வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்கு அழைத்து வருவதற்காகவே, கமிஷன் அடிப்படையில் இடைத்தரகர்களும் பலர் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு வேலைக்கு வரும் வெளிமாநில ஊழியர்களில் சிலர் திருட்டு, வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபடுவதாக சமீபத்தில் போலீஸார்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் வங்கிகள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் ஆகியவற்றில் நடந்த கொள்ளைகளில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே கடந்த 3 ஆண்டுகளாக தமிழக சுற்றுலா மற்றும் தொழில் நகரங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களை போலீஸார் கணக்கெடுக்க முடிவு செய்தனர்.  இதுவரை 75 சதவீத தொழிலாளர்களின் விவரத்தை கணக்கெடுத்துள்ளதாகவும், மீதமுள்ளவர்களை கணக்கெடுப்பு பட்டியலில் கொண்டு வரவும் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுகுறித்து திண்டுக்கல் எஸ்.பி. சரவணன் கூறும்போது, ‘‘வெளிமாநில தொழிலாளர்கள் அனைவர் மீதும் சந்தேகப்பட முடியாது. சிலர், குற்றச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு தங்கள் மாநிலத்துக்கு தப்பிச் செல்கின்றனர். அதேபோல குற்றப்பின்னணி உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் சிலர், இங்கு வேலைபார்க்கின்றனர். இதனால், வெளிமாநில தொழிலாளர்களுக்கு வேலை வழங்கும் முன்பு அவர்களது கைரேகையை பெறவேண்டும் என்றும், கைரேகை பெற்ற பிறகே வேலை வழங்கவும் தனியார் நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளோம்’’ என்றார்.

Leave a Reply