தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு சொந்தமான கல்லூரியில் பேராசிரியருக்கு உரிய சம்பளம் தராததால், கல்லூரியின் அதிகாரத்தை கைப்பற்றுவோம் என புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி என்ற அமைப்பு சென்னை முழுவதும் நேற்று ஒட்டியுள்ள போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய்காந்த்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் கல்லூரியில் யூஜிசி நியமித்த சம்பளத்தை அங்கு பணிபுரியும் பேராசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை என ஒருசில மாதங்களாக புகார்கள் வந்த நிலையில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி என்ற அமைப்பு சென்னை நகரின் முக்கிய பகுதிகள் முழுவதும் நேற்று இரவோடு இரவாக போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போஸ்டரில் மாணவர்களிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தில்தான் மகனை வைத்து சொந்தப்படம் எடுத்து வருவதாகவும், சினிமாவில் நல்லவனாகவும், வெளியில் கல்விக்கொள்ளையனாகவும் இருக்கும் இந்த குள்ளநரியை அடித்து விரட்டுவோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் காரணமாக தேமுதிக தொண்டர்களிடையே பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.