மதுரையில் உருவாகி வரும் தென் தமிழகத்தின் மிகப்பெரிய நூலகம். 2016ல் திறப்பு விழா

maduraiதென் தமிழகத்தின் மிகப்பெரிய நூலகம் மதுரையில் கட்டப்பட்டு வருகிறாது. இந்த நூலகம் வரும் 2016ஆம் ஆண்டு மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரையில் உள்ள உலகத்தமிழ் சங்க வளாகத்தில் அமையவுள்ள இந்த நூலகத்திற்கு இப்பொழுது முதலே புத்தகங்கள் குவியத்தொடங்கிவிட்டது.
கடந்த 1981ஆம் ஆண்டு மதுரையில் நடந்த உலகத்தமிழ் சங்க மாநாட்டின்போது உலகத்தமிழ் சங்கம் கட்டும்திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 2010ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி இந்த திட்டத்தை ‘தொல்காப்பியர் உலகத் தமிழ் செம்மொழிச் சங்கம்” என்று பெயரை மாற்றி ரூ.100 கோடி நிதி ஒதுக்கினார்.

மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த திட்டத்தின் பெயர் மீண்டும் ‘மதுரை உலகத் தமிழ்ச் சங்கம்’ என்று மாற்றப்பட்டு கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி கட்டிடம் கட்ட பூமி பூஜைகள் நடந்தது.

80 ஆயிரம் சதுரடியில் தரைத்தளம் மற்றும் முதல்மாடி என்ற அளவில் அமையவுள இந்த வளாகத்தில் குளிரூட்டப்பட்ட கலையரங்கம், கணினி அரங்கம் ஆகியவைகளுடன் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களையும், அவ்விடங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையையும் விளக்கும் அரங்கமும் அமையவுள்ளன. ஓராண்டுக்குள் பணியை முடிக்கும் வகையில், கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

இந்த தமிழ்ச் சங்க வளாகத்தில், 12 ஆயிரம் சதுரடியில் தென் தமிழகத்தின் மிகப் பெரிய நூலகமும் அமையவுள்ளது. உலகத் தமிழ் அறிஞர்களின் நூல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் கொண்டுள்ள பெட்டகமாக இந்த நூலகம் திகழ வேண்டும் என்றும், சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட ஆய்வாளர்களுக்குத் தேவையான அத்தனை நூல்களும் இங்கு இருக்க வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மதுரை உலக தமிழ்ச் சங்க தனி அலுவலர், அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், ‘பிரிட்டிஷ் நூலகத்தைப்போல, மதுரை உலக தமிழ்ச் சங்கத்திலும் நூலகம் ஏற்படுத்தப்படவுள்ளதால், தமிழக அரசின் பொது நூலகத் துறைக்கு வரும் அனைத்து நூல்களிலும் ஒரு படியை இங்கு அனுப்ப வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில், இதுவரை 5,617 நூல்கள் மதுரைக்கு வரப் பெற்றுள்ளன. கூடுதலாக புத்தகங்கள் வாங்க அரசிடம் ரூ. 25 லட்சம் கோரப்பட்டுள்ளது. மதுரை உலகத் தமிழ்ச் சங்க கட்டுமானப் பணிகள் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடையும் என்றும், அதைத் தொடர்ந்து, 2016, பிப்ரவரி மாதத்துக்குள் சங்கக் கட்டிடமும், நூலகமும் செயல்பாட்டுக்கு வரும் என்றும் தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply