டெல்லி நகராட்சிக்கு செலுத்தவேண்டிய சொத்து வரி மற்றும் குடிநீர் வரிகளை சோனியா, மன்மோகன் சிங், அத்வானி உள்பட 300க்கும் மேற்பட்ட செலுத்தாமல் உள்ளதாக பட்டியல் ஒன்று சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் டெல்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் டெல்லி மாநகராட்சி வரி செலுத்தாதவர்களின் பட்டியலை தைரியமாக வெளியிட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட வரிகளை செலுத்தாமல், பாக்கி வைத்துள்ள பட்டியல்களில் பிரபலங்களும் அடங்கியுள்ளனர் என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த பட்டியலில் காங்கிரஸ் தலைவி சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, நெஜ்மா ஹெப்துல்லா உள்ளிட்ட 166 மக்களவை எம்.பி.க்கள், 151 மாநிலங்களவை எம்.பி.க்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும், லட்சக்கணக்கில் வரி பாக்கி வைத்துள்ளவர்களில் நிஷாத், தேவகவுடா, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் முன்னணியில் உள்ளனர். அதேபோல், வரி பாக்கி வைத்துள்ள முன்னாள் மாநிலங்களவை எம்.பி.க்கள் 859 பேரும் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு டெல்லி நகராட்சி கவுன்சில் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், அவர்கள் பணத்தை செலுத்தாததால், மத்திய பொதுப்பணித்துறை மற்றும் வீட்டு வசதி வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள மத்திய பொதுப் பணித்துறை, இந்த வரிபாக்கிகளை எம்.பி.க்களின் சம்பளத்தில் இருந்து பிடித்துக் கொள்ள வழிவகை செய்யப்படும் என தெரிவித்துள்ளது.