நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதி போட்டியில் நடுவர்களின் தவறான தீர்ப்பால்தான் இந்திய அணி வெற்றி பெற்றதாக ஐ.சி.சி. தலைவரும் வங்கதேச கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவருமான முஷ்தபா கமல் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய வீரர் ரோஹித் சர்மா 90 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் அடித்த பந்து ஒன்றை வங்கதேச வீரர் பிடித்து அவுட் ஆக்கினார். ஆனால் நடுவர் ஆலிம் தாகிர் அந்த பந்தை நோ’ பால் என கூறியதால் ரோஹித் சர்மா அவுட்டில் இருந்து தப்பித்து 137 ரன்கள் வரை எடுத்தார். பின்னர் ரீப்ளேவில் அந்த பந்து நோ’ பால் அல்ல என்பது தெரிய வந்தது.
அதேபோல் வங்கதேச அணியின் முன்னணி பேட்ஸ்மேன் மக்மதுல்லாவை பவுண்டரி லைனில் வைத்து ஷிகர் தவான் அசாத்தியமாக கேட்ச் பிடித்து வெளியேற்றினார். ஆனால் இந்த கேட்ச்சை பிடித்த ஷிகர் தவான் எல்லைக் கோட்டை தொட்டுவிட்டதாக்வும், ஆனால் நடுவர் அதை கவனிக்காமல் அவுட் என்று தீர்ப்பளித்துவிட்டதாகவும் முஸ்தபா கமல் கூறியுள்ளார்.
இது குறித்து தனியார் தொலைக்காட்சி அவர் அளித்த பேட்டியில்,” இந்த போட்டியை நான் ஐ.சி.சி. தலைவராக இருந்து பார்க்கவில்லை. சாதாரண ஒரு ரசிகனாக இருந்து பார்க்கிறேன்.பெரும்பாலான இந்திய ரசிகர்கள் கூட, வங்கதேசத்துக்கு பாதகமான முடிவுகளை நடுவர்கள் அளித்ததாக கூறுகின்றனர்.இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக ஐ.சி.சி. தலைவர் பதவியில் இருந்து விலக கூட நான் தயாராக இருக்கிறேன்” என்றார்.
வங்கதேச கேப்டன் மோர்டசா கூறுகையில்,”மைதானத்தில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். நடுவரின் தீர்ப்பு கூறித்து நான் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனாலும் வங்க தேசம் ஏமாற்றப்பட்டதை உணர்கிறேன்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் வங்கதேச தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் திரண்டு நடுவர்களின் தீர்ப்பை எதிர்த்து ஊர்வலமாக சென்றனர். நேற்றையை போட்டிக்கு நடுவராக பணியாற்றிய பாகிஸ்தான் நடுவர் ஆலிம் தாரின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐ.சி.சி என்பது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அல்ல அது இந்திய கிரிக்கெட் கவுன்சில் என்று கோஷமிட்டனர்.
இது குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஷ்முல் ஹசன் தெரிவிக்கையில், ”ரோகித்துக்கு சாதகமாக வழங்கப்பட்ட நோபாலை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளோம். ஒரு முக்கியமான அவுட் வழங்கப்படாதது ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடும் என்பதற்கு நேற்றைய நடுவர்களின் செயல்பாடு ஒரு உதாரணம்” என்றார்.