அமெரிக்காவில் செய்யாத கொலைக்காக நீண்ட கால சிறை தண்டனை அனுபவித்த அப்பாவி மனிதர் ஒருவருக்கு நஷ்ட ஈடாக 6 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஒஹியோ என்ற மாகாணத்தை சேர்ந்த ரிக்கி ஜாக்சன் என்பவர் கடந்த 1975ஆம் ஆண்டு மணியார்டர் விற்பனை செய்யும் ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை பெற்றார். இவர் செய்த கொலையை நேரில் பார்த்ததாக 12 வயதான பள்ளி சிறுவன் எட்டி வெர்னான் என்ற சாட்சியின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால் 40 வருடங்கள் கழித்து சாட்சி சொன்ன எட்டி வெர்னான் சமீபத்தில் மனம் திறந்து ஒரு பேட்டியளித்தார். அதில், ஜாக்சன் வழக்கில் கட்டுக்கதையை அவிழ்த்து பொய்யான சாட்சி கூறியதாகவும், கொலை நடந்த நேரத்தில் பள்ளி பேருந்தில் சென்று கொண்டிருந்ததாகவும், கொலை நடந்ததை தான் பார்க்கவில்லை என்றும் கூறினார். இதையடுத்து கடந்த 39 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த அப்பாவி ஜாக்சன் தனது 59வது வயதில் சிறையில் இருந்து விடுதலையானார்.
அப்பாவியான ஜாக்சனுக்கு தவறாக தண்டனை அளிக்கப்பட்டுவிட்டது என்றும், அவருக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று கோரி வழக்கறிஞர் மைக்கேல் பெர்ரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் கடந்த வியாழனன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜாக்சனுக்கு 1 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டார். அதாவது இந்திய ரூபாயில் 6 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடப்பட்டது.
இந்த தீர்ப்பை கேட்ட ஜாக்சன் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார். வாவ், வாவ், வாவ், இது அற்புதமான தீர்ப்பு. எனக்கு என்ன சொல்வது என்றே தெரிவயவில்லை. இது மிக அதிகமான தொகை என்று அளவிலா ஆனந்தத்துடன் கூறினார். ஜாக்சன் குறித்து வழக்கறிஞர் பெர்ரி கூறுகையில், நான் சந்தித்ததிலேயே விவேகமான மனிதர் ஜாக்சன். அவரிடம் நீண்ட நேரம் பேசியதில் அவருக்கு அநீதி இழைக்கப்பட்டது கண்கூடாக தெரிந்தது. அதனால் தான் நீதியை நிலை நாட்டும் பொருட்டு இவ்வழக்கில் ஆஜரானேன் என்று கூறினார்.
தனக்கு தண்டனை கிடைக்கும் வகையில் பொய் சாட்சி அளித்த எட்டியை கடந்த மாதம் சந்தித்து பேசிய ஜாக்சன், 12 வயதில் அவன் செய்த தவறை மன்னிப்பதாக கூறினார்.