அனுமதியின்றி காவிரியின் குறுக்கே அணை. தடுத்த நிறுத்த பிரதமருக்கு முதல்வர் கடிதம்.

 opsகாவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் முதல் பன்னீர் செல்வம் எழுதியிருப்பதாவது:

”காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் இந்திய அரசிடமோ, தமிழக அரசிடமோ அல்லது காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையத்திடமோ அனுமதி பெறாமல் அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளது.

காவிரி நதி குறுக்கே எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு ஒப்புதல் பெறாமல் தொடங்கக் கூடாது என்று எங்கள் கட்சி தலைவி ஜெயலலிதா ஏற்கனவே பல தடவை வலியுறுத்தி இருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 12.11.2014 அன்று நானும் உங்களுக்கு எழுதிய கடிதத்தில் காவிரியில் மேகதாதுவில் அணை கட்ட உலகளாவிய தொழில்நுட்ப யோசனை கேட்டிருப்பது பற்றி தெரிவித்திருந்தேன்.

மேலும் தமிழ்நாடு ஒப்புதல் பெறாமல் காவிரியில் கர்நாடகம் நீர்ப்பாசனம், மின்உற்பத்தி, குடிநீர் உள்ளிட்ட எந்த திட்டங்களையும் தொடங்காமல் இருக்க அறிவுறுத்துமாறு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணை கட்டும் பணியைத் தொடரக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் 18.11.2014 அன்று தமிழக அரசு மனு செய்துள்ளது. மேலும் தமிழக சட்டசபையில் 5.12.2014 அன்று மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்க வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

கர்நாடக அரசு காவிரி குறுக்கே மேகதாது பகுதியில் இரண்டு அணைகள் கட்டுவதற்கு மேற்கொண்டுள்ள முயற்சியானது 5.2.2007ஆம் ஆண்டு காவிரி நதிநீர் ஆணையம் வெளியிட்ட இறுதி தீர்ப்புக்கும், 19.2.2013ல் மத்திய அரசு வெளியிட்ட அரசாணைக்கும் எதிரானதாகும். கர்நாடகாவின் நடவடிக்கை காவிரியில் தமிழகம் பெறும் காவிரி நதி நீரை பாதிப்பதாக அமையும்.

இந்த நிலையில் காவிரி குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு சட்ட விரோதமாக அணை கட்டுவதை தடுத்து நிறுத்தும் வகையில், அம்மாநில அரசிடம் மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும். மேலும் தமிழகம் ஒப்புதல் பெறாமல் காவிரி நதி குறுக்கே எந்த திட்டத்தையும் கர்நாடக அரசு செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான இறுதி உத்தரவு 19.2.2013 அன்று மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகும் அதை செயல்படுத்த மத்திய அரசு காவிரி நிர்வாக வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்கு முறை குழு எதுவும் ஏற்படுத்தப்பட வில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே காவிரி நிர்வாக வாரியம் அமைக்க மத்திய நீர்வள அமைச்சகத்துக்கு தாங்கள் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply