கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி வீழ்ச்சியடைந்ததை போல தமிழகத்திலும் அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இதுகுறித்து நேற்று சிவகெங்கையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ‘சிவகங்கை தொகுதி மட்டும் அல்ல. இந்தியா முழுவதும் முடிவுகள் இப்படித் தான் இருக்கும் என எனக்கு முன்பே தெரியும்” என்று அதிர்ச்சியளிக்கும்படி பேசியுள்ளார்.
சிவகங்கை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் பிரதிநிதிகள் மாநாடு காரைக்குடி மகர்நோன்பு திடலில் நடைபெற்றது. மாநாட்டில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி எனக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை. சிவகங்கை தொகுதி மட்டும் அல்ல. இந்தியா முழுவதும் முடிவுகள் இப்படித் தான் இருக்கும் என எனக்கு முன்பே தெரியும்.
காங்கிரஸ் அரசின் 10 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு சோர்வும், வெறுப்பும் ஏற்பட்டு விட்டது. தேர்தலில் தோல்வியை எதிர்பார்த்திருந்தாலும் அதில் வெளிப்பட்ட கசப்பான உண்மை தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்திவிட்டது.
தமிழ்நாட்டின் பெருமைகள் எல்லாவற்றையும் சிதைத்து விட்டது. 80 சதவீத வாக்காளர்கள் பணம் பெற்றுக் கொண்டு வாக்களித்த நிலை ஏற்பட்டது. இந்த ஜனநாயக படுகொலைக்கு திராவிட கட்சிகள் தான் காரணம்.
காங்கிரஸ் கட்சியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா 3 மடங்கு வளர்ச்சி பெற்றது. உலக பொருளாதாரமே இருள் சூழ்ந்து நின்ற நிலையில் இந்திய பொருளாதாரம் மட்டும் ஜொலிக்கும் வைரமாக திகழ்ந்தது என்று பொருளாதார வல்லுநர்கள் போற்றினர்.
காங்கிரஸ் ஆட்சியின் போது 14 கோடி பேரை வறுமைக்கோட்டுக்கு மேலே உயர்த்தி உள்ளோம். ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தினோம். தேர்தல் நேரத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் 100 நாட்கள் வேலை திட்டத்திற்கு பேராபத்து என்று எச்சரித்தேன். இப்போது அது நடந்து விட்டது.
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் வஞ்சகமாக பல்வேறு திருத்தங்களை பா.ஜ.க. அரசு செய்துள்ளது. ஏழை, எளிய விவசாயிகளுக்கு எதிரான காலனி ஆதிக்க மனப்பான்மை கொண்ட இந்த கொடுங்கோல் சட்டத்தை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.
பட்ஜெட் என்பது சாதாரண மக்களின் இதயத்தை தொடும் வகையில் இருக்க வேண்டும். ஆனால் பா.ஜ.க அரசின் பட்ஜெட் பணக்காரர்களுக்கான பட்ஜெட்டாக உள்ளது. பா.ஜ.க. ஆட்சி நடக்கும் காலக்கட்டத்தில் பணக்காரர்களுக்கு ரூ.2 லட்சம் கோடி வரிச்சலுகைகள் அளிக்கப்பட உள்ளது.
அதே நேரத்தில் ஏழை, எளிய மக்களுக்கான நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.73 ஆயிரம் கோடியை குறைத்துள்ளது. பா.ஜ.க ஆட்சி எப்படி என்பதை டெல்லி தேர்தல் உணர்த்தி விட்டது. மற்ற மாநிலங்களும் விரைவில் உணர்த்தும்.
காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என பா.ஜ.க கூறி வருகிறது. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. காங்கிரஸ் கட்சியை வலிமையான கட்சியாக இந்தியாவின் முதல் பெரிய கட்சியாக உருவாக்கும் பயணத்தில் எனது கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை பயணிப்பேன்.