புதுடில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டு உள்ளதால் டெல்லி உள்பட நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுடில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தின் 8வது நுழைவு வாசலில் உள்ள ரயில் பவனில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஏ.சி. மின் இணைப்பு பகுதியில் ஏற்பட்ட திடீர் மின்சாரக்கசிவுதான் இந்த தீ விபத்திற்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த தீவிபத்து குறித்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்த சில நிமிடங்களில் உடனடியாக சம்பவ இடத்திற்கு 7 தீயணைப்பு வண்டிகளில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட இந்த பயங்கர தீ விபத்தால், அந்த பகுதியே பெரும் புகை மூட்டத்துடன் காணப்பட்டது. விபத்து ஏற்பட்ட 8வது கேட் வழியாக தான் பார்வையாளர்கள் நாடாளுமன்றத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இந்த விபத்தில் ஏற்பட்ட இழப்பு குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை