பெண்களுக்கு எதற்குப் படிப்பு? பெண்களுக்கு எதற்கு தற்காப்புக் கலைகள்? என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் கூறி காலமெல்லாம் மலையேறி விட்டது. என் பேத்தி வெளிநாடு போய் படிக்கப் போறா. வெளிநாட்டிலேயே அவளுக்கு வேலை கிடைத்து விட்டது. அவ ரொம்ப தைரியசாலி.
ஆண்கள் பத்துப்பேரையும் எதிர்கொள்ளும் சாமர்த்தியம் அவளுக்கு இருக்கு என்பது போன்ற பேச்சுக்கள் நம் காதில் தினமும் விபந்து கொண்டுதான் இருக்கின்றது. பெண்கள் தனியாக வெளியே செல்லும் பொழுதும் சரி அல்லது வீட்டிலேயே தனியாக இருப்பதனாலும் சரி ஒரு ஆபத்தான சூழ்நிலை ஏற்படும் போது அதனை மனதைரியத்துடன் சாமர்த்தியமாக சமாளித்து அப்பிரச்சனையிலிருந்து வெளியே வரத் தெரிந்திருக்க வேண்டும்.
விழிப்புணர்வு :
பாதுகாப்பின் முதல் தாரக மந்திரம் இதுதான். பொதுவாகவே மக்களிம் ஷெல்ஃப்டிஃபன்ஸ் என்றாலே ஒருவர் மற்றொருவரை தாக்குவது என்ற கருத்தே ஆழமாகப் பதிந்துள்ளது. அது தவறு. பெண்கள் எங்கு இருந்தாலும் உங்களைப் பற்றியும், நீங்கள் இருக்கும் சூழலைப்பற்றியும் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். கைபேசியில் பேசும் போது உலகத்தையே மறந்து விடுபவர்கள் தன்னை சுற்றி நடக்கும் எந்த ஒரு விஷயத்தையும் கவனிக்க தவறுகிறார்கள் என்து உண்மை தானே?
ஆறாவது அறிவை பயன்படுத்துதல் :
நம்மை சுற்றி ஏதோ ஒரு உறுத்தலான நபர் இருக்கிறார் அல்லது ஏதோ ஒன்று நடக்கின்றது என்பதை உணர்ந்த மறுநொடியே அதற்கு உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்து செயல்பட வேண்டும். பெரும்பாலும் பெண்கள் தங்களுடைய புத்திசாலித்தனத்தை உபயோகப்படுத்தி அந்த சூழ்நிலையிலிருந்து வெளிவருபவர்களாகவே இருக்கின்றார்கள்.
சுய பாதுகாப்பு பயிற்சி :
எந்த ஒரு தாற்காப்புக் கலையை அறிந்திருந்தாலும் அதை உரிய நேரத்தில் தம்மை பாதுகாத்துக் கொள்ள உடனடியாக உபயோகப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். இது போன்ற சுய பாதுகாப்பு பயிற்சிகளுக்கு செல்வதை பெண்கள் தற்பொழுது விரும்புகிறார்கள் என்றே சொல்லலாம்.
எஸ்கேப் :
ஏதாவது ஒரு சூழ்நிலையில் ஒருவரிடம் மாட்டி கொள்கிறோம் என்றால் நான் தற்காப்பு கலைகள் தெரிந்தவள் அதனால் போராடியே தீருவேன் என்று பேசுவதை விட்டுவிட்டு சூழ்நிலைக்கு ஏற்றவாறு அங்கிருந்து தப்பித்து ஓடுவது மிகச்சிறந்த வழி என்று தோன்றினால் அதை செய்வது தான் சிறந்தது.
பெப்பர் ஸ்பிரே :
இது ஒரு மிகச்சிறந்த சுய பாதுகாப்பு கருவி என்றே சொல்லலாம். ஒவ்வொரு பெண்ணும் தங்களுடைய கைப்பையில் அழகு சாதனப் பொருள் வைத்திருப்பது போலவே இதையும் வைத்திருப்பது அவசியமாகும். இந்த ஸ்பிரேயை அடிக்கும் பொழுது எப்போர்ப்பட்டவர்களும் சற்று தடுமாறத்தான் செய்வார்கள். மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் இந்த ஸ்பிரே உபயோகித்து அங்கிருந்த தப்பிக்க முயற்சி செய்யலாம்.
கதவுகளை பூட்டி வைப்பது :
வீட்டிலிருக்கும் பெண்கள் முகப்பு கதவுகளின் வெளியிலிருக்கும் க்ரில் கதவுகளை எப்பொழுதும பூட்டி வைத்திருப்பது நல்லது. அதேபோல் யாராவது அழைப்பு மணியை அழுத்தினால் கூட உடனடியாக கதவை திறக்காமல் உட்புறமிருந்தே யார்? எங்கிருந்து வந்திருக்கிறார்கள்? என்பதை விசாரித்த பின்னர் கதவை திறக்கலாம்.
கார்களை ஓட்டிச்செல்லும் பெண்கள் :
பெண்கள் காரின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடியபடியே பயணம் செய்வது நல்லது. அதிலும் முக்கியமாக காரை எங்காவது நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் கார் ஜன்னல்களை மூடியிருக்கின்றனவா என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உதவிக்கு யாரும் இல்லை என வருந்தாதே. உனக்குத் துணையாக தன்னம்பிக்கையை வைத்துக்கொள். தைரியமாக போராடு பெண்ணே.