ஐ.ஏ.எஸ் அதிகாரி ரவி மர்ம மரணம் வழக்கை சிபிஐ விசாரிக்கும். கர்நாடக முதல்வர் உத்தரவு.

ரவிகடந்த சில நாட்களுக்கு முன்னர் மர்மமான முறையில் இறந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ரவி அவர்களின் வழக்கை கர்நாடக முதல்வர் ஒப்புதல் வழங்கினால் சிபிஐக்கு மாற்ற தயாராக இருப்பதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருந்தார். இந்நிலையில் கர்நாடக முதல்வர் சிபிஐ விசாரணைக்கு இன்று ஒப்புதல் வழங்கி உத்தரவில் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

பெங்களூருவில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, கர்நாடகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தன. இதையடுத்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி மரணம் குறித்த சிபிஐ விசாரணைக்கு கர்நாடக அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 2009-இல் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பொறுப்பேற்ற டி.கே.ரவி, கடந்த 16-ஆம் தேதி பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருடைய மரணத்திற்கு மணல் கொள்ளை மாஃபியாக்கள் காரணம் என ரவியின் குடும்பத்தினர்களும் எதிர்க்கட்சிகளும் குற்றஞ்சாட்டியதோடு, இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

அதுமட்டுமின்றி வரும் 28ம் தேதி கர்நாடக மாநிலம் முழுவதும்  முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ரவியின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும், உண்மை தகவல்கள் வெளிவர வேண்டும் என கூறிய கர்நாடக முதல்வர் சி.பி.ஐ விசாரனைக்கு ஒப்புதல் அளித்துள்ளார்

Leave a Reply