சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே உள்ள அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தம் நகரின் மிகவும் பிஸியான பேருந்து நிறுத்தங்களில் ஒன்று. ஆனால் இந்த இடத்தில் பேருந்துகள் குறிப்பிட்ட இடத்தில் நிற்காமல் அருகிலுள்ள பாலத்தின் அருகே நிற்பதால் அதிகளவிலான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து பல ஊடகங்கள் புகார் கூறியும் சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என பயணிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த பேருந்து நிறுத்தத்தில் பல பேருந்துகள் சரியான இடத்தில் நிற்காததால் பெண்கள் மற்றும் வயதானவர்கள் உள்பட அனைவரும் பேருந்துகள் நிற்கும் இடங்களுக்கு ஓடிச்சென்று ஏறுவதால் விபத்துக்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாக பலர் எச்சரித்து வருகின்றனர். விபரீதமாக ஏதாவது விபத்து ஏற்படுவதற்கு முன்னர் போக்குவரத்து அதிகாரிகளும், பேருந்து ஓட்டுனர்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து சரியான இடத்தில் பேருந்து நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர்.