ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டால் ஒருவரை கைது செய்ய வழிவகுக்கும் தகவல் தொழில்நுட்ப சட்டத் திருத்தம் 66ஏ சட்டம் ரத்து செய்யப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை நேற்று அளித்துள்ளது,. இதனால் சமூக வலைத்தள பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டால் தண்டனை விதிக்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தில், 66ஏ சட்ட திருத்தத்தை, கடந்த 2008ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்தது. இதனிடையே, கடந்த 2012ல் சிவசேனா தலைவர் பால்தாக்கரே மறைந்த பின் நடந்தப்பட்ட முழு அடைப்பு போராட்டம் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த மாணவி கைது செய்யப்பட்டார். அவருடைய கருத்துக்கு லைக் போட்ட பெண்ணும் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
எனவே இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சட்டக்கல்லூரி மாணவி ஷ்ரேயா சின்ஹால் உட்பட பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவிற்கு மத்திய அரசு அளித்த பதில் மனுவில், உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் பதிவு செய்யப்படும் கருத்து சுதந்திரமான மெசேஜ்களை சமூக ஊடங்கங்களில் வெளியிடுவதை குற்றமாக கருத முடியாது. சமூக வலைதளங்களில் எரிச்சலூட்டும், சிரமமான மற்றும் அபாயகரமான செய்திகளை பதிவு செய்யும் நபர்களை காவல்துறையினர் கைது செய்ய சட்டத்தில் அதிகாரம் உள்ளது. இதுகுறித்த கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்த அரசு விரும்பவில்லை. ஒருவர் தனது பேச்சு சுதந்திரத்தை நடைமுறைப்படுத்தவது அல்லது அமலாக்குவது குற்றமல்ல. சைபர் குற்றங்களுக்கு ஏற்றவாறு இந்த சட்டம் மாற்றி செயல்படும் என்று தெரிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து, பாதுகாப்பான கருத்து சுதந்திரம் மற்றும் சட்டத்தை மீறுதல் தொடர்பாக கண்காணிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் செலமேஸ்வர், நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று அளித்த தீர்ப்பில், சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டால் தண்டனை விதிக்கும் வகையில் தகவல் தொழில் நுட்ப சட்டத்தில் பிரிவு கொண்டுவரப்பட்ட திருத்தம் 66ஏ செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த சட்டத்திருத்தம் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. அரசாங்கங்கள் வரும் போகும், சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுவிடக்கூடாது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி சுதந்திரமாக ஒருவர் கருத்தை பேச, எழுத உரிமை உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.