மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேற்று சென்னை அருகேயுள்ள கும்முடிபூண்டி பகுதியில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமை பார்வையிட வருகை தந்தார். இங்கு வாழும் இலங்கை அகதிகளின் வாழ்வதாரம் எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்வதற்காகவும், அவர்களுக்கு மேலும் என்னென்ன வசதிகள் தேவைப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்காகவும் அவர் வருகை தந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
பின்னர் விமான நிலையத்தில் பேட்டியளித்த அமைச்சர் கிரண் ரிஜிஜூ அவர்களிடம் செய்தியாளர்கள் ‘இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுமா? என்று கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த அமைச்சர், இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் அதிகாரம் தன்னுடைய அமைச்சகத்திற்கு இல்லை என்றும், அது வெளியுறவு துறை அமைச்சகம் எடுக்கவேண்டிய முடிவு என்றும் கூறினார்.
மேலும் அகதிகள் விருப்பப்பட்டல் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் இலங்கை செல்ல விருப்பம் இல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யும் என்றும் அவர் கூறினார்.
மத்திய அமைச்சரிடம் கும்மிடிபூண்டி இலங்கை அகதிகள் தங்கள் குறைகளை கூறியதாகவும், அவர்களுடைய குறைகளை தீர்க்க மத்திய அரசு மாநில அரசுடன் கலந்து ஆலோசித்து விரைவில் தீர்வு ஏற்படுத்த முயற்சி செய்யும் என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சரின் வருகையை ஒட்டி கும்மிடிபூண்டியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.