அரேபிய நாடுகளில் ஒன்றாக விளங்கி வரும் ஏமன் நாட்டின் அதிபர் அப்ட் ரப்பு மன்சூர் ஹாடி தலைமையிலான அதிபர் ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஏமனில் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் ஆதரவுடன் ஷியா இனத்தின் ஒரு பிரிவான ஹவ்த்தி இன மக்கள் அதிபரின் ஆட்சிக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த புரட்சியை முறியடிக்க அதிபரின் படைகளுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய படைகள் ஆலோசனையும் ஆயுதங்களும் வழங்கி வருகின்றன. புரட்சியை முற்றிலுமாக முறியடிக்க ஐக்கிய நாடுகள் சபை தலைமையிலான பன்னாட்டு படைகளை அனுப்பி உதவி புரிய வேண்டும் என அப்ட் ரப்பு மன்சூர் ஹாடி வேண்டுகோள் விடுத்து வருகிறார்.
இந்நிலையில் ஏமன் நாட்டு ராணுவ அமைச்சரை அதிரடியாக சிறைபிடித்துள்ள தீவிரவாதிகள் அதிபரின் தலைக்கும் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை பரிசுத்தொகையாக அறிவித்துள்ளனர்.
ஏமனின் துறைமுக நகரான ஏடென்-னில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள விமானப்படை தளத்தை புரட்சியாளர்கள் படை நேற்று கைப்பற்றியுள்ளதால் நாடு முழுவதும் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய செய்திகள் வெளியானதும் அதிபர் அப்ட் ரப்பு மன்சூர் ஹாடி தனது பாதுகாவலர்களுடன் அரண்மனையை விட்டு தப்பி ஓடிவிட்டதாக செய்திகள் கூறுகின்றன.
அதிபரின் காருக்கு பாதுகாப்பாக ஏராளமான கார்கள் சென்றதாகவும், அவர்கள் எங்கு சென்றனர்? என்பது தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை எனவும் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. .
இந்த இக்கட்டான காலகட்டத்திலாவது, தலைதூக்கி வரும் புரட்சிப் படையின் கொட்டத்தை அடக்க அரேபிய நாடுகள் தங்களது படைகளை அனுப்ப முன்வர வேண்டும் என ஏமன் வெளியுறவு துறை மந்திரி ரியாட் யாசின் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதிபர் அப்ட் ரப்பு மன்சூர் ஹாடி பாதுகாப்பான ஒரு கவசக் கோட்டையில் இருந்தபடி, ஏமன் ராணுவ வீரர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாக அதிபர் அலுவலக உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரேபிய நாடுகளிலேயே மிகவும் ஏழை நாடு ஏமன் என்பது குறிப்பிடத்தக்கது.