பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவரும் முன்னாள் இந்திய பிரதமருமான வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறாது. இந்த விருதை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வாஜ்பாயின் இல்லத்திற்கு சென்று நேரில் வழங்குகிறார்.
1942ஆம் ஆண்டு முதல் பொது வாழ்க்கையில் ஈடுபட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இந்தியாவின் 10வது பிரதமராக கடந்த 16-5-1996 அன்று பதவி ஏற்றார். இருப்பினும் பாராளுமன்றத்தில் எம்.பி.க்களின் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாததால், 13 நாட்களிலேயே அவரது ஆட்சி பதவி விலக நேர்ந்தது.
பின்னர், 1998ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றினாலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு இரண்டாவது முறை பதவியேற்றது. இம்முறையும் அவரது ஆட்சி நீடிக்கவில்லை. 13 மாதங்களில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சி கவிழ்ந்தது.
அதன் பின்னர், 1999ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றி பெற்று மூன்றாவது முறையாக 13-10-1999 அன்று வாஜ்பாய் இந்தியாவின் பிரதமராக பதவியேற்று 5 ஆண்டுகாலம் பொற்கால ஆட்சியை இந்திய மக்களுக்கு அளித்தார். இவரது ஆட்சியில்தான் பொக்ரான் அணு குண்டு சோதனை, கார்கில் போர் ஆகிய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சிகள் நடந்தன. இதன் மூலம் இந்தியாவின் ஆற்றலையும், பெருமையயும் உலக நாடுகளுக்கு உணர்த்தினார்.
2005ஆம் ஆண்டு தீவிர அரசியலில் இருந்த ஒதுங்கிய நிலையில் வயது மூப்பு காரணமாக தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில், வாஜ்பாய் 2014ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
இதையடுத்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வரும் 27ஆம் தேதி வாஜ்பாய் வீட்டிற்கே சென்று வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருதினை வழங்கி சிறப்பிக்கிறார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மற்றும் பல மாநிலங்களை சேர்ந்த அமைச்சர்கள், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.