‘லிங்கா’ பட இழப்பீடு தொகையை பங்கிட்டு கொள்வதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக்க நெல்லையை சேர்ந்த வினியோகஸ்தர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வெளிவந்த செய்தியால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
‘லிங்கா’ படத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட ஒரு குறிப்பிட்ட தொகையை நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் முயற்சியால் வினியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்டு அந்த பிரச்னை முடித்து வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி ‘லிங்கா’ பட வினியோகஸ்தர்கள் அனைவரும் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. இதில் திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் ‘லிங்கா’ பட வினியோக உரிமையை பெற்று இருந்த திருநெல்வேலியை சேர்ந்த அய்யப்பன் சென்னை வந்து கூட்டத்தில் கலந்து கொண்டார்.
தற்போது வந்துள்ள தொகை குறைவாக இருப்பதாகவும், அந்த தொகை அய்யப்பனுக்கு கிடைக்காது என்றும் கூட்டத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அய்யப்பன், விருகம்பாக்கம் அருணாச்சலம் சாலையில் தனது நண்பர் தங்கி இருந்த தனியார் விடுதி அறைக்குள் சென்று விஷத்தை குடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அய்யப்பனின் நண்பர், அய்யப்பனை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அய்யப்பன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இழப்பீடு கேட்டு போராட்டம் நடத்தி வந்த லிங்கா பட வினியோகஸ்தர்கள், தற்போது, வழங்கப்பட்டுள்ள இழப்பீட்டு தொகையை பிரிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்னையால் தற்கொலை முயற்சி வரை சென்றுள்ள சம்பவம் தமிழ் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரு பெரும் தொகையை சிங்காரவேலன் கைப்பற்றிவிட்டு சென்றுவிட்டதாக செய்திகள் கசிந்து வருகின்றது. ஆனால் இந்த செய்தியை சிங்காரவேலன் மறுத்துள்ளார். தன் மீது வேண்டுமென்றே கார்ப்பரேட் நிறுவனங்கள் பழி சுமத்துவதாக அவர் கூறியுள்ளார்.