உடல் சூட்டை தணிக்கும் வெட்டிவேர்

vetiver

வெட்டிவேர் வேர்வையை உண்டாக்குவதுடன் உற்சாக மிகுதியையும் ஏற்படுத்தக் கூடியது. தலைமுடித் தைலத்தில் சேர்ந்து முடி விழாமலும் ஆரோக்கியமாகவும் இருக்க வெட்டிவேர் எண்ணெய் உபயோகப்படும். இதைக் குடிநீராகக் காய்ச்சிக் குடிப்பதால் பல்வேறு வகைப்பட்ட காய்ச்சலும் (சுரம்) குணமாவதோடு கைகால்களில் ஏற்படும் பிடிப்பு, மாதர் தமக்கு ஏற்படும் சூதக வாயு எனப்படும் மாத விலக்குக் கோளாறுகள் ஆகியவற்றையும் குணமாக்கும்.

வெட்டிவேர் பித்தரோகம், காமாலை, சோகை, சுரம், குட்டம் (தோல் நோய்கள்), தலைநோய், கழுத்து நோய், சுக்கில நட்டம், உன்மத்தம், திரிதோஷம், மூர்ச்சை (மயக்கம்), நேத்திர ரோகம் (கண் சம்பந்தப்பட்ட நோய்கள்) போன்ற நோய்களுக்கும் ஓர் அற்புதமான மூலிகை ஆகும். வெட்டி வேரை அரைத்தோ அல்லது அதன் எண்ணெய்யையோ பெண்களின் மார்பகத்தின்மேல் தோன்றும் சிலந்திப் புண்கள், ரணம், கட்டி, மேகக்கட்டி இவைகளுக்கு மேற்பூச்சு மருந்தாகப் போட விரைவில் குணமாகும்.

வெட்டிவேர் உடலுக்கு மேலும், உடல் உள்ளுறுப்புகளுக்கும் குளிர்ச்சியைத் தரக்கூடியது, உடல் காய்ச்சலைப் போக்கக் கூடியது, வியர்வையைத் தூண்டக் கூடியது, உள்ளுறுப்புகளைத் தூண்டி சீராகச் செயல்பட வைக்கக் கூடியது, வயிற்றுக் கோளாறுகளை வேறறுக்கச் செய்வது, கடுப்பினைப் போக்கவல்லது, மாதவிலக்கை ஒழுங்குபடுத்தக் கூடியது, வற்றச்செய்யும் தன்மையுடையது, ரத்தத்தை சுத்திகரிக்க வல்லது.

வெட்டிவேர் காய்ச்சல், கடுப்பு, வயிற்றில் சேர்ந்த வாயு, வாந்தி, குமட்டல், சிறுநீரோடு விந்து வெளியாகுதல், சிறுநீர்த்தூரை வலி, எரிச்சல், சிறுநீரோடு ரத்தம் சேர்ந்து வருதல், ஆகியனவற்றுக்கு மருந்தாகிப் பலன் தருகின்றது. வெட்டி வேரைக் கொண்டு எடுக்கப்படும் எண்ணெய் வாந்தி, குமட்டல், வயிற்று வலி, வாயு ஆகியவற்றைப் போக்கக் கூடியது.

வெட்டிவேர் ஒரு நோய் எதிர்ப்புத் தன்மை வாய்ந்த மூலிகை ஆகும். இது முகப்பருக்களைப் போக்குவதில் முதன்மையான மூலிகை ஆகும். வெட்டி வேரையும் சந்தனத்தையும் ஒருசேர சேர்த்து முகப்பூச்சாக உபயோகப்படுத்துவதால் முகப்பருக்கள் விரைவில் குணமாகும். இரவு முழுவதும் சிறிது வெட்டி வேரை நீரில் இட்டு ஊற வைத்து எடுத்த நீரில் சந்தனக் கட்டையை இழைத்து வந்தன.

சந்தன விழுதை மேல்பூச்சாக பூசுவதால் பருக்கள் விரைவில் குணமாகும். இதனோடு கூட வெட்டிவேர் எண்ணெய்யும் அவ்வப்போது பருக்களின் மேலே போட்டு வருவதால் வெகுவிரைவான முன்னேற்றம் காணும். வெட்டிவேர் தலைமுடி பராமரிப்புக்கு மிகவும் முக்கியமான ஓர் மூலிகை ஆகும். வெட்டிவேரை நீரிலிட்டு ஊற வைத்துப் பெற்ற வாசமுள்ள நீரை தாகம் தீர்க்கவும், உள்ளுறுப்புகளின் வெப்பத்தைத் தணிக்கவும் குடிப்பது வழக்கம்.

ஆனால், இந்நீர் தலைமுடி பராமரிப்புக்கும் மிகப்பெரிய மருந்தாகும் என்பதை நம்மில் பலர் அறிந்தோமில்லை. வெட்டிவேர் நீரைக் கொண்டு தலைமுடியைக் கழுவுவதால் தலைசூடு தணியும், கண்கள் குளிர்ச்சி பெறும், கண்பார்வையும் தெளிவு பெறும். வெட்டிவேர் ஊற வைத்த நீரைக் குடிப்பதால் சிறுநீர்த்தாரை எரிச்சல் அடங்கும்.

வயிற்றில் மட்டுமின்றி உள்ளுறுப்புக்கள் வேறு எங்கு புண்கள் இருந்தாலும் அவற்றை ஆற்றுவதோடு ரத்தத்தை சுத்திகரிக்கவும் செய்யும் வாய்துர்நாற்றத்தையும், உடலின் வியர்வை நாற்றத்தையும் கூட இது போக்கும்.

வெட்டிவேர் நீர் மத்திய நரம்பு மண்டலத்துக்கு சாந்தம் தரவல்லது. வெட்டிவேரை ஒரு கற்றை அளவு எடுத்து மண் பானையிலிட்டு கொதிக்க வைத்து ஆறவைத்த நீரை அதனுள் விட்டு இரண்டு அல்லது மூன்று மணிநேர அளவு ஊறவைக்க வெட்டிவேரின் மணமும், குணமும் நீரோடு கலந்துவிடும். பின்னர் ஒரு எலுமிச்சை பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நீரில் போட்டு வைக்க எலுமிச்சையின் சத்தும் நீரோடு கலந்துவிடும்.

இதை வடிகட்டி உள்ளுக்குக் குடிப்பதற்கும் தலைமுடியைக் கழுவுவதற்கும் பயன்படுத்தலாம். உடல் குளிர்ச்சி பெற்று கோடைக்கால வெய்யிலைத் தவிர்க்க உதவும். தலைமுடியை இந்நீர் கொண்டு கழுவுவதால் தலைக்குக் குளிர்ச்சியும், தலைமுடிக்கு வறண்ட நிலை மாறி ஈரத்தன்மையும், மென்மையும், அடர்த்தியும் ஏற்படுவதோடு பொடுகு போன்ற தொல்லைகளும் விலகிப் போகும். வெட்டிவேரை ஓர் அருமையான குளியல் பொடியாகவும் நாம் உபயோகப்படுத்தலாம்.

வெட்டிவேரை ஒருபந்துபோல சுற்றி குளிக்கும் போது உடலைச் சுத்தப்படுத்த தேய்த்துக் குளிக்கலாம். இதனால் தோலின் வறண்ட, இறந்துபோன செல்கள் நீக்கப்பட்டு தோல் அழகும் மென்மையும் பெறும். அதுமட்டுமின்றி வெட்டிவேரையும் பாசிப்பயரையும் ஒரே மெல்லிய பொடியாக அரைத்து வைத்துக் கொண்டு சீயக்காய்,

சோப்புக்கு பதிலாக அன்றாடம் உடலைத் தேய்த்துத் குளிப்பதற்குப் பயன்படுத்துவதால் தோல் பட்டு போன்ற பளபளப்பையும் மென்மையும் பெறுவதோடு நல்ல வண்ணத்தையும் அடையும். இப்பொடி எந்த ஒரு ரசாயனக் கலவையும் சேராததால் சிறு குழந்தைகளை குளிப்பாட்டுவதற்குக் கூட இதைப் பயன்படுத்தலாம்.

* வெட்டி வேரைப் பாய்போல் முடைந்து நீரில் நனைத்து பகுதியிலோ வாயிற்பகுதியிலோ திரை சீலை போல தொங்க விடுவதால் வெளியிலிருந்து உள்வரும் காற்று குளிர்ந்ததாகவும், வாசனையுள்ளதாகவும் இருக்கும். வாசனை ஓர் மருத்துவ குணத்தையும் பெற்றது ஆகும். இந்த மணம் மனிதர்க்கு குளிர்ச்சி தருவதோடு மனதுக்கு இதமான அமைதியைத் தரக் கூடியது ஆகும்.

(அரோமாதெராபி) வெட்டிவேரின் மணத்தால் இன உறுப்புகளின் இறுக்கம் தளர்ந்து (ஃப்ரிஜிடிடி) உடல் உறவில் நாட்டம் ஏற்படும். உறவின் போது கோடைக்கால எரிச்சலும் குளிர்தருவதாகும். வெட்டிவேரின் இந்த குளிர்ந்த மணம் வெறி நோயையும் (இன்சேனிடி), கடுங்கோபத்தையும், படபடப்பையும் (ஆங்சைட்டி) கூட போக்க கூடிய மருந்தாக அமையும். வெட்டி வேரின் குளுமையும் மணமும் மிக்க காற்று நல்ல உறக்கத்தைத் தூண்டக் கூடியதாகவும் (செடேடிவ்) அமையும்.

* வெட்டி வேர் வீக்கத்தைக் கரைக்கும். (ஆன்டிஇன்ஃப்ளமேட்டரி) தன்மையுடைது மட்டுமின்றி நோய்த்தடுப்பு பொடியாகவோ, எண்ணெயாகவோ உள்ளுக்கும் மேலுக்கும் உபயோகப்படுத்துவதால் ரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து அடைப்பை அகற்றி இரத்த ஓட்டம் செம்மையாக நடைபெற வழிசெய்யும். மேலும் நரம்பு மண்டலங்களுக்கு ஊட்டமும் அமைதியும் தந்து ஒழுங்காகச் செயல்படும் படி வழி செய்யும்.

* வெட்டிவேரைப் பொடியாகவோ எண்ணெயாகவோ உள்ளுக்கும் மேலுக்கும் உபயோகப்படுத்துவதால் ரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து அடைப்பை அகற்றி இரத்த ஓட்டம் செம்மையாக நடைபெற வழி செய்யும். மேலும் நரம்பு மண்டலங்களோடு ஊட்டமும், அமைதியும் தந்து ஒழுங்காகச் செயல்பட வழிசெய்யும்.

* வெட்டி வேரை அரைத்து பசையாக்கியோ அல்லது அதன் எண்ணெயிலோ மேற்பூச்சாகப் பயன்படுத்துவதால் மூட்டுவலிகள் (ரூமேட்டிசம்) கை,கால்வலிகள், ஓரித்தலைவாதம் (கவுட்), தசைவலிகள், தோல்வறட்சி, தோலில் ஏற்படும் வெடிப்புகள் ஆகியன விரைவில் குணமாகும்.

* வெட்டிவேர் எண்ணெயை உள்ளுக்கும் மேலுக்கும் உபயோகப்படுத்துவதால் அதனுடைய சாந்தபடுத்தும் தன்மையால் கோபம் தணியும். உணர்ச்சிவயப்படுதல், வலிப்பு மற்றும் மூர்ச்சைக்கு ஆளாகுதல், மனஅமைதியின்மை, நரம்பு தளர்ச்சி ஆகியன குணமாகும். வெட்டிவேர் மருந்தாகும் விதம்:- .

* வெட்டிவேரைப் பொடித்து நன்றாக சலித்து வைத்து கொண்டு அந்தி சந்தி என இரண்டு வேளையும் 200மி.கி முதல் 600 மி.கி வரை தேனுடன் சேர்த்துக் குழைத்து சாப்பிட பைத்தியம், உடல் எரிச்சல், நாவறட்சி இவைகள் நீங்குவதோடு உள்ளக் களிப்பு எய்தும்.

* அதிகமான காயச்சல் கண்டபோது வெட்டிவேரை நீரில்அல்லது பன்னீரில் அரைத்து நெற்றிக்கு பற்றுபோடுவதால் வெகு சீக்கிரத்தில் காய்ச்சல் தணிந்து போகும்.

* ஒரு பாட்டிலில் கால்பங்கு அளவுக்கு வெட்டி வேரையும்,வெந்தயத்தையும் போட்டு அதனுடன் சிறிது கருஞ்சீரகமும் சேர்த்து மீதிப்பகுதிக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி நல்ல சூரிய ஒளியில் வைக்க வேண்டும். இதை சூரியபுடம் என்று சொல்லுவர். ஒரு வார காலம் இப்படி சூரியபுடமாக வைத்த எண்ணெயை அன்றாடம் தலைக்குத் தேய்த்து கண்களின் சிவப்பு மாறி கண்பார்வையும் தெரிவுபெறும். இதே எண்ணையை வெண்புள்ளிகளின் மீது (லூக்கோடெர்மா) சற்று அழுத்தி தேய்த்து வருவதால் நாளடைவில் வெண்புள்ளிகள் குணமாகும்.

* வெட்டிவேரைப் பொடித்து நன்றாக சலித்துக் கொண்டு அதனுடன் நெருஞ்சிமுள் சூரணம் சமபங்கு சேர்த்து அன்றாடம் அந்தி சந்தி என இருவேளை தேனுடனோ அல்லது வெந்நீருடனா சேர்த்து அருந்தி வர சிறுநீரகக் கற்கள் கரைந்து வெளியேறும். சிறுநீரகத்தில் சிறுநீர் தேங்கி தருகின்ற சிறுநீரகக் கெடுதல் மறையும். சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல், நீர்க்கடுப்பு, சொட்டு மூத்திரம் போன்றவையும் குணமாகும்.

* வெட்டி வேர்ப்பொடி தினம் இருவேளை வெருகடி அளவு தேனில் குழைத்து உண்டு வர காக்காய் வலிப்பு (எபிலெப்ஸி) குணமாகும்.  மணமும் மருத்துவ குணமும் நிறைந்த வெட்டிவேரை மனதில் பதிய வைத்து ஆரோக்கிய வாழ்வுக்கு அடிகோலுவோம்.

Leave a Reply