இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய்க்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, அவரது இல்லத்திற்கே நேரடியாக சென்று வழங்கி கெளரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பாரத பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வாஜ்பாயின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாஜக மூத்த தலைவர் அத்வானி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செüகான், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் ஆகியோர்களும் விருது வழங்கும்போது உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1998 முதல் 2004ஆம் ஆண்டு வரை இந்தியாவின் பிரதமர் பதவியை வகித்த வாஜ்பாய், தற்போது முதுமை காரணமாக அரசியலில் இருந்து விலகி ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதி, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் உடன் லாகூர் ஒப்பந்தத்தில் வாஜ்பாய் கையெழுத்திட்டார். இதைத் தொடர்ந்து, டில்லி – லாகூர் இடையே பஸ் சேவையைத் தொடக்கி வைத்தார்.பொக்ரான் அணுகுண்டு, கார்கில் வெற்றி ஆகியவை வாஜ்பாய் ஆட்சியில் நடந்த சாதனை நிகழ்ச்சிகள் ஆகும்.
ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்த காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. முதுபெரும் அரசியல் தலைவருமான இவருக்கு, பாரத ரத்னா விருதை கடந்த டிசம்பர் 24ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது.
தலைவர்கள் வாழ்த்து: பாரத ரத்னா விருது பெற்ற வாஜ்பாய்க்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜேட்லி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்