அன்புமணி மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்.

anbumaniஉளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை தாக்கியதாக தமிழக அரசு முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி மீது தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை நேற்று செய்தியாளர்களிடம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

இதுகுறித்து பா.ம.க. இளைஞரணி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும், பாமகவின் முதல்வர் வேட்பாளருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை தாக்கியதாக என் மீது தொடரப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்து கடந்த பிப்ரவரி 9-ந்தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு அவசர அவசரமாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, சிவ்கீர்த்தி சிங் ஆகியோரை கொண்ட அமர்வு இந்த மேல்முறையீட்டை நேற்று அறிமுக நிலையிலேயே தள்ளுபடி செய்துள்ளது.

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்குதல் தொடர்பான முழு உண்மைகளும் காவல்துறைக்கு நன்றாக தெரியும் என்ற போதிலும், இவ்வழக்கில் என்னை சிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அடுத்தடுத்து பொய்யான புகார்களை சுமத்தினார்கள். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளாக காவல்துறையினரால் பட்டியலிடப்பட்ட 3 பேரில் ஒருவர் கூட இத்தாக்குதலுக்கு நான் தான் காரணம் என்றோ, நான் தூண்டியதாகவோ, நான் உடந்தையாக இருந்ததாகவோ எந்த இடத்திலும் கூறவில்லை.

ஆனால், நான் தான் அனைத்துக்கும் காரணம் என்பது போல காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். இதை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் என் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று கூறி தள்ளுபடி செய்து விட்டது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத தமிழக அரசு, காவல்துறையைத் தூண்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இப்போது உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உண்மையும், நீதியும் வெற்றி பெற்றிருக்கின்றன.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Leave a Reply