உமாசங்கருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு. சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

umashankarஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மனைவி தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தது குறித்த வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டிலும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் (டிக்) நிர்வாக இயக்குனராக கடந்த 6.8.2008 முதல் 3.11.2008 வரை பணியாற்றி வந்தார். அந்த சமயத்தில் அவருடைய மனைவி சூர்யகலா, டெஸ்சால்வ் என்ற தனியார் நிறுவனத்தில் 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பணி செய்ததாகவும், கணவர் பணிபுரியும் தொழில் முதலீட்டு கழகத்திடம்  சூர்யகலா பணிபுரியும் டெஸ்சால்வ் நிறுவனம் கடன் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

உமாசங்கர் பதவி வகித்த தொழில் முதலீட்டு கழகத்துடன் வர்த்தக தொடர்புள்ள நிறுவனத்துக்கு, அவரது மனைவி வேலைக்கு சென்ற விவரத்தை காலதாமதமாக அவர் அரசுக்கு தெரிவித்ததாகாவர் மீது குற்றம் சாட்டிய தமிழக அரசு அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியது.

இது குறித்து அலுவலக ரீதியான விசாரணை நடத்தப்பட்டு, அகில இந்திய ஆட்சிப்பணி விதி 4(2)(ஏ)யின் கீழ் நடவடிக்கை எடுக்க குற்றச்சாட்டு குறிப்பாணை 19.1.2009 அன்று உமாசங்கருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டது. இந்த குறிப்பாணையை எதிர்த்து உமாசங்கர், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, உமாசங்கரின் மனைவி, டெஸ்சால்வ் நிறுவனத்தில் பணியில் சேர்வதற்கு அரசிடம் முன்அனுமதி பெறவில்லை என்ற ஒரு சிறு குற்றச்சாட்டுதான் அவர் மீது உள்ளது. ஆனால் பணியில் சேர்ந்த பின்னர்தான், அதுகுறித்து உமாசங்கர், அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவரது மனைவி, சொந்த திறமையில் வேலைக்கு சேர்ந்துள்ளாரே தவிர, அவருக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக அந்த தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக உமாசங்கர் செயல்பட்டார் என்றோ, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்றோ குற்றச்சாட்டு இல்லை. எனவே உமாசங்கருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறிப்பாணை ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவு பிறப்பித்தது.

சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் விக்ரம்ஜித் சென் மற்றும் அபய் மனோகர் சப்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு சார்பில் அரசு வக்கீல் சுப்பிரமணியபிரசாத் ஆஜராகி வாதாடினார். விசாரணை தொடங்கியதும் இந்த மேல்முறையீட்டு மனுவில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் ஏதுமில்லை என்று நீதிபதிகள் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Leave a Reply