எண்ணெய் கத்தரிக்காய்

ennai_2350591f

காய்கறிச் சந்தை முழுக்கக் குவிந்து கிடக்கும் கத்தரிக்காய், வெயில் காலத்தின் வருகைக்குக் கட்டியம் கூறிவிடும். கத்தரிக்காயை வைத்து விதவிதமாகச் சமைக்க முடியாதே என்பது பலரது வருத்தம். அந்த வருத்தத்தைப் போக்குவதற்காகப் புது விதமான சமையல் குறிப்புகளுடன் வந்திருக்கிறார் சென்னை டிரஸ்ட்புரத்தைச் சேர்ந்த லக்ஷ்மி சீனிவாசன். கத்தரிக்காய் பிரியாணி, தவா டிலைட் என விதவிதமாக இவர் கற்றுத் தரும் கத்தரிக்காய் சமையலை நாமும் சமைத்து ருசிக்கலாம்.

என்னென்ன தேவை?

ஊதா நிற பிஞ்சு கத்தரிக்காய் – கால் கிலோ

புளி – 50 கிராம்

மஞ்சள் தூள், பெருங்காயம் – தலா 1 சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

வறுத்துப் பொடிக்க

வெள்ளை எள் – 50 கிராம்

கடலைப் பருப்பு, உளுந்து – தலா 2 டேபிள் ஸ்பூன்

காஷ்மீரி நிற மிளகாய் – 10

வெல்லம் – சிறு கட்டி

பூண்டு – 4 பல்

துருவிய கொப்பரை – 2 டீஸ்பூன்

மிளகு – அரை டீஸ்பூன்

தாளிக்க

நாட்டுத் தக்காளி – 2

கடுகு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன்

நல்லெண்ணெய் – 200 கிராம்

எப்படிச் செய்வது?

வறுக்கக் கொடுத்திருக்கும் பொருட்களைத் துளி எண்ணெயில் சிவக்க வறுத்தெடுக்கவும். ஆறியதும் சிறிதளவு உப்பு சேர்த்து ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். கத்தரிக்காயைக் காம்பு நீக்கி, நான்காகப் பிளக்கவும். அரைத்த பொடியைக் கத்தரிக்காயினுள் நிரப்பவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், பெருங்காயம் சேர்த்துத் தாளிக்கவும். தக்காளி சேர்த்து வதக்கி, பொடி நிரப்பிய கத்தரிக்காயை ஒவ்வொன்றாகச் சேர்க்கவும். கரண்டியால் திருப்பிப் போடாமல், அப்படியே குலுக்கிவிடவும். பாதி வதங்கியதும் கரைத்த புளி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து மூடிவைத்து குறைந்த தீயில் வதக்கவும். காய் நன்கு வதங்கி, எண்ணெய் பிரியும்போது மீதியிருக்கும் பொடி, வெல்லம் சேர்த்து இறக்கிவைக்கவும். மல்லித்தழை தூவிப் பரிமாறவும். ரொட்டி, நாண், சாதத்துக்கு ஏற்றது.

Leave a Reply