ஒரு ஊரில் சிவபெருமான் மீது தீவிர பக்தி கொண்ட ஒருவன் இருந்தான். அவன் சிவபெருமானைத் தவிர இதர தெய்வங்களை வழிபட மறுத்ததோடு அன்றி, அந்தத் தெய்வங்களை தூற்றியும் வந்தான். ஒரு நாள், அவன் முன்பாக தோன்றிய சிவபெருமான், ‘நீ மற்ற தெய்வங்களைத் தூற்றிக் கொண்டிருக்கும் வரையில், உன் மீது எனக்குப் பிரியம் உண்டாகாது’ என்று எச்சரிக்கை விடுத்து மறைந்தார்.
தான் விரும்பி வழிபடும் இறைவனே நேரில் வந்து இக்கருத்தைக் கூறிய பிறகும் கூட, அவனால் மற்ற தெய்வங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சிவபெருமான் கூறிய கருத்தை அவன் ஏற்கும் மனநிலையில் இல்லை. ஆகவே பிடிவாதமாக தனது கொள்கையை மாற்றிக்கொள்ளாது, மற்ற தெய்வங்களை இழிவாகவே பேசி வந்தான்.
தன் மீது பெரும் பக்தி கொண்ட பக்தன் திருந்துவதற்காக, மற்றொரு சந்தர்ப்பத்தை சிவபெருமான் ஏற்படுத்தினார். அதன்படி மீண்டும் ஒருமுறை அந்த பக்தனின் முன்பாக அவர் தோன்றினார். ஆனால் இந்த முறை சிவபெருமானாக அல்ல.. சங்கர நாராயணராக!. அந்த தோற்றத்தைக் கண்டதும் பக்தன் பாதி மகிழ்ச்சியும், பாதி வெறுப்பும் அடைந்தான்.அவன் சிவபெருமான் வடிவில் உள்ள பாகத்துக்கு மட்டும் நைவேத்தியங்கள் செய்து வழிபட்டான். விஷ்ணுவின் வடிவம் தாங்கிய பாகத்தைப் புறக்கணித்தான். சிவவடிவம் கொண்ட உருவத்தின் முன்னால் நறுமணம் கமழும் ஊதுவத்திகளை ஏற்றி வைத்தான்.
ஆனால் அந்த நறுமணத்தை விஷ்ணு அனுபவிக்காதபடி, அவரது பாகத்தில் அடங்கிய மூக்கை தனது கைவிரல்களால் அழுத்தமாக மூடினான். அவனது மூடத்தனத்தை கண்ட சிவபெருமான், ‘எல்லாத் தெய்வங்களும், ஒரே பரம்பொருளின் பல்வேறு தோற்றங்களே என்பதை உனக்கு உணர்த்துவதற்காகவே சங்கர நாராயணனாகக் காட்சி தந்தேன்.
ஆனால் நீ அதை உணர்ந்து கொள்ளாமல், பேதம் காட்டும் உனது பிடிவாதக் கொள்கையை வலுவாக பற்றிக்கொண்டிருக்கிறாய். இந்தக் குற்றத்துக்காக நீ துன்பப்படப் போகிறாய்’ என்று கூறி மறைந்தார். அதற்கடுத்த சில நாட்களில் அந்த மூட பக்தன், வேறொரு ஊரில் குடியேறும் நிலை ஏற்பட்டது.
அந்த ஊருக்குச் சென்ற பிறகும், சிவனை உயர்த்தியும், மற்ற தெய்வங்களை தாழ்த்தியும் பேசி வந்தான். அவன் முன்பைவிட மதவெறி அதிகரித்தவனாக மாறிப்போனான். அவன் பிற மத துவேசியாக இருப்பதைக் கண்டு, அந்த ஊர் சிறுவர்கள் அவனது காதுகளில் விழும்படியாக தங்களது தெய்வங்களின் கீர்த்தனைகளை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தனர்.
சிறுவர்களின் செயல்களும், தொந்தரவும் அந்த மனிதனுக்கு வெறுப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தின. ஆகவே அவன் மற்ற தெய்வங்களின் கீர்த்தனைகளும், நாமங்களும் தன் காதில் விழாமல் இருப்பதற்காக, இரண்டு காதுகளிலும் இரண்டு மணிகளைத் தொங்கவிட்டுக்கொண்டான். யாராவது கீர்த்தனை பாடினால், தலையை ஆட்டி மணிகளை ஒலிக்கச் செய்வான்.
இதனால் அவனை அனைவரும் ‘கண்டா கர்ணன்’ (மணி தொங்கும் காதுடையவன்) என்று அழைத்தனர். இறுதிவரை அவன் தன் நிலையை மாற்றிக்கொள்ளாமலேயே வாழ்ந்து, அனைவராலும் தூற்றப்பட்டு முடிவில் நரகம் சென்றடைந்தான். தெய்வ பேதமும், மத பேதமும் இருக்கக் கூடாது. அனைத்து தெய்வங்களையும் சமமாக பாவித்து கைதொழுவதே முறையாகும்.
தான் வணங்கும் தெய்வத்தின் மீது பற்றுதல் இருக்கலாம். அதே நேரத்தில் பிற தெய்வத்தின் மீதோ, மதத்தின் மீதோ தூற்றுதலை பின்பற்றுபவனை, இறைவன் ஒருநாளும் கை தூக்கிவிடுவதில்லை. அந்த பாவிக்கு ஒருபோதும் இறையருள் கிடைக்காது. அவன் அனைவராலும் தூற்றப்பட்டு, அவமானத்துடனேயே வாழ்வான் என்பதே உண்மை.