இதுவரை உலகிலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சியாக இருந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியை பின்னுக்கு தள்ளிவிட்டு உலகில் மிக அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சியாக பாரதிய ஜனதா கட்சி அந்தஸ்து பெற்றுள்ளது. அந்த கட்சியில் தற்போது 8 கோடியே 80 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். சீனாவின் கம்யூனிஸ்டு கட்சியில் 8 கோடியே 30 லட்சம் பேர் உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே மிகப்பெரிய கட்சியாக உருவாக வேண்டும் என்று அதன் தேசிய தலைவர் அமித்ஷா பதவியேற்றவுடனே திட்டமிட்டு, தொடர்ந்து நாடெங்கும் பாஜகவுக்கு உறுப்பினர் சேர்க்கும் பணியை கடந்த நவம்பர் மாதம் முதல் முடுக்கி விட்டார். உறுப்பினர்கள் சேர்க்கையை எளிமைப்படுத்த செல்போன்களில் மிஸ்டுகால் கொடுக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு அதன் மூலம் லட்சக்கணக்கானோர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டதாக கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன.
இது தவிர இணையதளம் மூலமாகவும் உறுப்பினர்கள் சேர்க்கை நடந்தது. பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தி தற்போது இந்த சாதனையை புரிந்துள்ளார்.
இதுவரை பாஜகவில் 8 கோடியே 80 லட்சம் உறுப்பினர்கள் இருப்பதாக பாஜக அறிவித்திருந்தாலும், உறுப்பினர்கள் எண்ணிக்கை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏப்ரல் 3 அல்லது 4 ஆம் தேதிகளில் பெங்களூரில் நடக்கும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் அறிவிக்க அமித்ஷா திட்டமிட்டுள்ளார்.
2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம் உள்பட பிற மாநிலங்களில் உறுப்பினர்கள் சேர்க்கையைத் தீவிரப்படுத்த பாஜக தீர்மானித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.