தி.மு.க வாரிசு அரசியல் இருப்பது உண்மைதான் என்று ஒரு மேடையில் தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கலைஞரின் லட்சயத்திற்காக வாழும் அவருடைய மகன் ஸ்டாலின் வாரிசாக ஏன் இருக்ககூடாது? என்ற கேள்வியையும் பரபரப்புடன் எழுப்பினார்.
தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்று நேற்று தேனி மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஓ.பி.பன்னீர்செல்வத்தின் ஊரான பெரியகுளம் பேருந்து நிலையம் அருகிலுள்ள அரண்மனை தெருவில் நடந்தது. சிறப்பு பேச்சாளர்களாக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய தி.மு.க கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா கூறியதாவது”தி.மு.க வாரிசு அரசியல் இருக்கிறது இல்லையென்று சொல்லவில்லை. ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா, ஒடிசா நவீன் பட்நாயக், ஹரியானாவின் சௌதாலா, உத்தரபிரதேசத்தின் அகிலேஷ் யாதவ் ஆகியோர் எந்த தியாகத்தையும் செய்யாமல் முதல்வர்களாக அமைச்சர்களாக இருக்கும்போது கலைஞரின் லட்சயத்திற்காக வாழும் ஸ்டாலின் வாரிசாக இருக்ககூடாதா? ஆனால், அவர் இன்னும் முதலமைச்சர் ஆகவில்லையே.
அ.தி.மு.க கொண்டு வந்தது 110 இல்லை. அது 420. கடந்த அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில், “தமிழ்நாட்டிற்கு 55,000 கோடி கடனாக வைத்து கஜானாவை காலியாக்கியது தி.மு.க” என்று சொன்னார்கள். ஆனால் இன்று அவர்களின் ஆட்சியில் இரண்டு லட்சம் கோடி கடன் என்று சொல்லியிருக்கிறார் முதல்வர். காவிரி பிரச்னை விவகாரத்தில் கல்யாணம் முடித்தவரே கலைஞர் தான். 1967க்கு பின் தமிழக, கர்நாடக அமைச்சர்களிடையே பேச்சுவார்த்தையை நடத்தி, தீர்மானம் போட்டு, காவிரி நடுவர் நீதிமன்றம், இடைக்கால நிவாரணமாக 225 டி.எம்.சி தண்ணீர், ஒழுங்குமுறை ஆணையம் என இவையனைத்தும் அமைக்கப்பட்டது கலைஞர் காலத்தில் தான். கடைசியில் தீர்ப்பு அரசு கெஜட்டில் வெளியானது மட்டும் அ.தி.மு.க ஆட்சியில். கல்யாணம் பண்ணி முதலிரவு நடத்தி, பத்துமாதம் காத்திருந்தது ஒருவர், அவருக்கு பிறந்த குழந்தையை தூக்கிட்டு ஓடியவர் இன்னொருவர். அவருக்கு பொன்னியின் செல்வி என்ற பட்டம் வேறா? என வரிந்து கட்டினார். நில கையக்கப்படுத்தும் சட்டம், இஸ்லாம், கிறித்துவ மதங்களுக்கு எதிரான செயல்பாடு என மத்திய அரசும் மக்களுக்கு எதிரான அரசாகவே இருக்கிறது. அடுத்த ஆண்டு தேர்தல் வர இருக்கிறது. அப்போது மாற்றத்தை கொண்டு வருவோம்” என்றார்.
தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, “எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது சோத்துபாறை அணைகட்டுவதாக பல ஆண்டுகளாக சொல்லிவிட்டுப் போனார்கள். ஆனால் எந்த விளைவும் இல்லை. ஆனால் கலைஞர் ஒரே தவணையில் 45 கோடி நிதி ஒதுக்கி அணையை கட்ட வழிவகை செய்தார். முல்லை பெரியாறு, காவிரி விவகாரத்தில் தி.மு.க.விற்கு பேச அனுமதி இல்லை என அ.தி.மு.க கூவிகிறார்கள். முல்லை பெரியாறில் 152 அடியிலிருந்து 136 ஆக குறைத்தது
அ.தி.மு.க தானே.
பணக்காரர்கள் மட்டும் பயன்படுத்தும் செல்போன் இன்றைக்கு ஐம்பது பைசாவில் அனைவரும் பயன்படுத்துமாறு கொண்டு வந்தவர் நம்முடைய அமைச்சர் ராசா. அ.தி.மு.க 110 கீழ் கொண்டுவந்த எந்த திட்டமும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அதற்காக மஞ்சள் நோட்டீசை முதலில் கொடுக்கப்போகிற அரசு அ.தி.மு.க அரசாகத்தான் இருக்கும். செத்துப்போனவர்களை வென்டிலேட்டர்களில் வைத்துள்ள அரசு இது. இந்த அரசு என்றைக்கோ செத்துப்போய் விட்டது. நாம் 24 லட்சம் முதியவர்களுக்கு உதவித்தொகை கொடுத்தோம். ஆனால் அவர்களுக்கு எந்த பணத்தையும் கொடுக்காமல் அவர்களை சாக வைத்திருக்கிறது. இந்த அரசை மாற்ற வேண்டும்” என்றார்.
தேனி மாவட்ட செயலாளர் மூக்கையா, “தமிழகத்தில் இந்த ஊரை சேர்ந்தவரின் பினாமி ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, பன்னீர் செல்வம் என மூன்று முதல்வர்களை இந்த மாவட்டம் தந்திருந்தாலும், தேனி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டது என்னவோ கலைஞரின் ஆட்சியில் தான். அதோடு சோத்துப்பாறை , 18 ஆம் கால்வாய், பெரியகுளம் கூட்டு குடிநீர் திட்டங்களை கொண்டு வந்ததும் தி.மு.க.தான் . 1989-ல் இருந்து மாறி மாறி ஆட்சி நடந்து வருகிறது . அந்த வகையில் அடுத்து தி.மு.க ஆட்சிதான்” என்றார்