இடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்….

pelvic pain

இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் இன்று ஏராளம். இளைய தலைமுறை முதல் வயதானவர்கள் வரை இன்று சந்திக்கும் ஒரு பிரச்னை இடுப்புவலி.

இடுப்பு வலி ஏற்டுவதற்கு என்ன காரணம்?

அதிகபட்ச நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடுப்பு வலி ஏற்படுகிறது. குறிப்பாக கணினியின் முன்பு அமர்ந்து வேலை செய்யும் இளைய தலைமுறைகள் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு, இடுப்புவலியால் துடித்துப் போகின்றனர்.

காரணம் இடைவிடாமல் உட்கார்ந்து கொண்டே கணினியின் முன்பு அமர்ந்திருப்பதுதான்.
இதற்குத் தீர்வு என்ன?

அடிக்கடி அமர்ந்திருக்கும் இருக்கை விட்டு எழுந்து செல்லலாம். சரியான உயரத்தில் அமைக்கப்பட்ட மேசைகளை பயன்படுத்த வேண்டும். கணினி வைத்திருக்கும் மேசையை ஏற்றி இறக்கும் வகையில் அமைக்க வேண்டும். அமர்ந்திருக்கும் இருக்கை நன்கு சுழலுமாறும், மேசையின் உயரத்திற்கு தகுந்தவாறும் இருக்கையின் உயரத்தை வைக்க வேண்டும். பணி முடிந்ததும் நாள்தோறும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

சரியான முறையில் நாற்காலியில் உட்கார்ந்து பணியாற்ற வேண்டும். தொடர்ச்சியாக கணினியின் முன்பு அமர்ந்து பணியாற்றுவதால் இடுப்புப்பகுதியில் சதைகள் அழுத்தப்பட்டு, முதுகுத் தண்டின் சவ்வில் தேய்மானம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். இதனால் தாங்க முடியாத இடுப்பு வலி ஏற்படும்.

தொடர்ச்சியாக இதே நிலை நீடித்தால், இறுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். எனவே வரும் முன் காப்பதே சிறந்த வழி. மேற்கொண்ட முறைகளை நடைமுறைப்படுத்த, விரைவில் இடுப்பு வலியிலிருந்து மீள முடியும்.

இடுப்பு வலியை குணமாக்கும் கொள்ளு…

கொள்ளு பல பிரச்னைகளைத் தீர்க்கும் ஒரு இயற்கை உணவுப் பொருள். கிராமங்களில் அதிகமாக இது கிடைக்கும். கொள்ளு ரசம் வைத்து குடிக்க இடுப்பு வலி பறந்து போகும். உடல் பருமனாக உள்ளவர்கள் கொள்ளை வாரம் மூன்று முறை சேர்க்க உடல் தசைகள் இறுகி, ஒரு ஆரோக்கியமான உடல் வாகை பெற முடியும். உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றுகிறது.

அரை தம்ளர் தண்ணீரில் ஒரு கரண்டி அளவு ஓமம் சேர்த்து அதில் 100 மிலி தேங்காய் எண்ணெய்யை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ள வேண்டும்.பிறகு அவற்றுடன் கற்பூரப் பொடியை சேர்த்து இளஞ்சூடாக இருக்கும் போது தேய்க்க வேண்டும். முருங்கைப் பட்டை, சுக்கு இவை இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து மேலே பூச வலி போகும்.

நல்லெண்ணையில் மருதாணி இலையை போட்டு காய்ச்சி பூசவும். பூண்டை போட்டு காய்ச்சிய வேப்பெண்ணை தடவவும். பச்சைக் கற்பூரத்துடன் புதினா இலைச் சாறு கலந்து தடவவும்.

விழுதி இலையை எடுத்து சாறு பிழிந்து அதனுடன் நல்லெண்ணையை கலந்து 5 மி.லி வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி குறையும்.

பெண்களுக்கு இடுப்பு வலி நீங்க:

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வயிற்று வலியும் இடுப்பு வலியும் ஏற்படுவது இயற்கை. இந்த வலிகளைப் போக்க நூறு கிராம் அளவுக்கு வெந்தயத்தை நன்றாக பொடியாக்கி, அதில் இருநூறு கிராம் சர்க்கரையை கலந்து சாப்பிட வயிற்றுவலி, இடுப்பு வலி நீங்கும். வெள்ளைப் பூண்டுடன் கருப்பட்டியை கலந்து சாப்பிட இடுப்புவலி பெருமளவு குறைந்துவிடும்.

இளம்பெண்களுக்கு இடுப்பு வலி நீங்க:

நீங்கள் ஹைஹீல்ஸ் அணியும் பழக்கமுள்ளவர் எனில் அதன் மூலம் கூட உங்களுக்கு இடுப்பு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக உயரமுள்ள குதிகால் உடைய செருப்புகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.

ஹைஹீல்ஸ் அணிந்து நீண்ட நேரம் நடந்து செல்வதால் உடல் எடை முழுவதும் பாதத்தை நோக்கி அழுத்தப்படுவதால் முதுகு வலி, மூட்டு வலி, இடுப்பு வலி ஏற்படும். மிளகை பொன் வறுவலாக வறுத்து அதில் எள் எண்ணையை கலந்து சாப்பிட இடுப்பு வலி குறையும்.
தளுதாளி இலையுடன் பூண்டு, எள் எண்ணெய் (நல்லெண்ணெய்) சேர்த்து துவையல் செய்து சாப்பிட இடுப்பு வலி குணமாகும்.

ஆயூர்வேத சிகிச்சை முறைகள்:

ஆயுர்வேதத்தில் ‘கிரிதரஸி’ எனப்படும் இடுப்பு வலி வாயுவால் உண்டாகும் என கருதப்படுகிறது. தவறான அங்கஸ்திதி, முதுகுவலி, சுளுக்கு இவைகளை ஆயுர்வேதம் காரணமென்கிறது. குளிர்காலமும், மலச்சிக்கலும் ஸியாடிகா பாதிப்புகளை தூண்டிவிடும்.

அறிகுறிகள்

‘சியாடிகா’ உடலின் ஒரு பக்கத்தை முடக்கும் கீழ் இடுப்பிலிருந்து பாதம் வரை வலி, இழுப்பு ஏற்படும். கால் விரல்களில் பாதத்தில் ஊசி குத்துவது போன்ற வலி, விட்டு விட்டு வலி, தீடீர் வலி இவை ஏற்படும். வலி குறைவாக இருக்கலாம். இல்லை தீவிர பொறுக்க முடியாத வலியும் ஏற்படும். பிட்டம், தொடை, ஆடுகால் தசை, பாதம் இங்கெல்லாம் வலி வரும். இந்த பாகங்களில் மரத்துப்போனது போன்ற உணர்ச்சிகளிருக்கும். இந்த மரத்துபோகும் சமயத்தில் முதுகு வலி (சில வேளைகளில்) இருக்காது.

1) அபதர்பன சிகிச்சை – உணவு கட்டுப்பாட்டின் மூலம் உடற்பருமனைக் குறைத்தல்.

2) ஆலேபனம் – நாகராதி சூர்ணம், ஜடாமயாதி சூர்ணம், கொட்டம் சுக்காதி சூர்ணம், கருத்த மர்மனி குளிகை போன்றவற்றைக் கொண்டு பத்து போடுதல்.

3) பரிசேக சிகிச்சை – தான்யாம்லத்தில் (காடி) தாரை சிகிச்சை செய்தல். இச்சிகிச்சை வலியிலிருந்து விரைவில் நிவாரணம் அளிக்கும்.

4) அப்யங்கம் (MASSAGE) – சஹசராதி தைலம், சஹசராதி குழம்பு, தன்வந்தரம் தைலம், முறிவெண்ண, மஹா நாராயண தைலம், கற்பூராதி தைலம், மஹா மாஷ தைலம் போன்ற தைலங்களைக் கொண்டு ஆயில் மசாஜ் செய்தல் நல்ல பலனையளிக்கும்.

5) ஸ்வேதன சிகிச்சை – (SUDATION) இலைகிழி, ஜம்பீர பிண்டம், வாலுகா பிண்டம் வைத்து ஸ்வேதன சிகிச்சை செய்தல்.
6) விமலாபன சிகிச்சை – ஸ்பைனல் மசாஜ் (SPINAL MASSAGE) ட்ராக்ஸன் மசாஜ் (TRACTION MASSAGE) செய்தல். பொதுவாக 2.5 kg + 2.kg, 2.5kg+2.5kg எடை பயன்படுத்துதல் நன்று.

7) உபநாக சிகிச்சை – ஜடாமயாதி சூர்ணம், ஆமணக்கு இலை மற்றும் ஊமத்தை காய் அல்லது ஆமணக்கு விதையுடன் எள் சேர்த்து அரைத்து உபநாகம் செய்தல்.
விரேசன சிகிச்சை – இந்துகாந்த கிருதம், திக்தக கிருதம் கொண்டு ஸ்நேக பானம் செய்த பிறகு கந்தர்வஹஸ்தாதி ஏரண்டம், திரிவிருத் லேஹ்யம், அவிபத்தி சூரணம் கொண்டு பேதி செய்வித்தல். விரேசனம் மிக முக்கிய சிகிச்சையாக கருதப்படுகிறது.

10) பந்தன சிகிச்சை (BANDAGE) – ட்ரக்ஸன் செய்த பிறகு முறிவெண்ணெய் வைத்து கட்டு போடுதல் நல்ல பலனையளிக்கும். L.S CORSET அணிய பரிந்துரைக்கப்படுகிறது.

11) ஸ்நேக வஸ்தி – சஹசராதி குழம்பு, தாந்வந்தரம் குழம்பு எனிமா கொடுக்க மென்தட்டில் ஏற்படும் அழுத்தம் குறையூம்.

12) கடி வஸ்தி – கடி கிரகத்தில் (SCIATICA வில்) கடி வஸ்தி மிக முக்கிய சிகிச்சையாக மேற்கொள்ளப்படுகிறது. முறிவெண்ணெய் மற்றும் சஹசராதி தைலம் கொண்டு கடி வஸ்தி அல்லது பிச்சு செய்ய நல்ல பலனையளிக்கும்.

13) சஹசராதி கஷாயம், குக்குலு ராஸ்னாதி, மஹா ராஸ்னாதி, சிறிய ராஸ்னாதி போன்ற கஷாயங்கள் உள்ளுக்கு சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

14) யோகாசன சிகிச்சை – புஜங்காசனம், பவன முக்தாசனம் பரிந்துரைக்கப்படுகிறது.

இடுப்பு வலி வராமல் தடுக்க சில வழிமுறைகள்:

உடல் எடையை பராமரித்தல், மிதமான உடற்பயிற்சி, அதிக எடை தூக்காதிருத்தல், முறையின்றி நீண்ட நேரம் அமர்ந்திருத்தல், அதிக அளவில் டூ வீலர் பயணம் செய்யாமை, எண்ணெய் தேய்த்து குளித்தல் போன்ற உபாயங்களைக் கையாண்டால் IVDP ஏற்படாமல் தடுக்கலாம்.

உணவு கட்டுபாடும் உதவும். காரம், எண்ணெய், அதிக புளி, கிழங்கு வகைகள், பொறித்த வறுத்த உணவுகள் இவற்றை தவிர்க்க வேண்டும்.

இதர வழிகள்:

1. முன்பே சொன்னபடி ஒய்வெடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் படுக்கையிலேயே முடங்கி விட வேண்டாம். அவ்வப்போது எழுந்து சிறு நடை பயிலுங்கள்.

2. குப்புற படுக்கக் கூடாது.

3. நெடுநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணி செய்கின்ற போது முதுகெலும்பு அதிக அழுத்தத்திற்கு ஆளாகிறது. குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாகிலும் இருக்கையை விட்டு நிமிட நேரம் நின்று சிறிது தூரம் நடந்து பின்னர் வந்து அமருங்கள்.

4. நெடுநேரம் இருக்கையில் அமர வேண்டி வந்தால் சாய்ந்தோ அல்லது தொய்வாகவோ இராமல் நன்கு நிமிர்ந்து உட்காரப் பழகுங்கள்.

5. உங்கள் பணி நிமித்தம் நெடுநேரம் நிற்க வேண்டி வந்தால் அது உங்கள் இடுப்பு மூட்டுக்களையும், முதுகு எலும்பையும் பாதிக்கக் கூடும். ஒரு காலை நேராகவும், மற்றொரு காலைச் சற்று மடக்கிய நிலையிலும் வைத்து நிற்கலாம். சிறிய பலகை அல்லது குட்டி ஸ்டூலின் மேல் ஒரு காலை வைத்துக் கொள்ளலாம்.

6. இயன்றவரை மிகத் தட்டையான தலையணை ஒன்றைப் பயன்படுத்தி மல்லாந்த நிலையில் படுத்துத் தூங்குவது நல்லது.

7. ஸ்பாஞ்ச், இலவம் பஞ்சு நிறைந்த மென்மையான மெத்தைகளைத் தவிர்த்து தேங்காய்நார் மெத்தைகளில் படுப்பது நல்லது.

8. ஸ்பிரிங் இல்லாத தட்டையான மரக்கட்டில் அல்லது கோத்ரெஜ் கட்டில் போன்ற ஒன்றில் படுக்க முயலுங்கள்.

9. படுக்கையிலிருந்து திடுமென எழுந்திராமல் மெல்ல உருண்டு படுக்கையின் ஒரத்திற்கு வந்து கால்களைத் தரையில் ஊன்றி எழுந்து உட்காருங்கள்.

10. நீண்ட நடைப்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

11. பளுதூக்குவது போன்ற பயிற்சிகளைத் தவிருங்கள்.

12. தரையில் கிடக்கும் பொருள்களைக் குனிந்து எடுக்காதீர்கள். குத்துக்காலிட்டு உட்கார்ந்து அதன் பின் எடுங்கள்.

13. தரையிலுள்ள பொருள்கள் எதையேனும் தூக்க வேண்டி வந்தால் மண்டியிட்டு உட்கார்ந்து அதன் பின்னர் தூக்குங்கள்.

14. கழுத்துவலி, தோள்வலி இருந்தால் அதற்கு மருத்துவம் செய்து கொள்ளுங்கள். இல்லாவிடில் அது முதுகு வலியில் போய் முடியலாம்.

15. உடல் எடையை இயன்ற அளவு கட்டுக்குள் வையுங்கள்.

16. பெண்கள் தங்கள் பிட்டப் பகுதியின் எடை பெரிதும் மிகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் 4 கிலோ மீட்டராவது நடக்கின்ற பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

17. முதுகுவலி பற்றியே எந்த நேரமும் சிந்தனை செய்து வாழ்வை நரகமாக்கிக் கொள்ளாதீர்கள். எல்லோருக்கும் வரக்கூடிய ஒன்று தான் என்று இயல்பாக எடுத்துக் கொள்ளுங்கள்.

18. பெரும்பாலான ஆர்த்ரைடீஸ், முதுகெலும்பு பிரச்சனைகள் வர காரணம் மலச்சிக்கல். இதை தவிர்க்கவும்.

உணவு முறை:

குளிர் உணவு / பானங்களை தவிர்க்கவும். ஐஸ்கீரிம், குளிர்பானங்களை தவிர்க்கவும். பழைய உணவுகளை தவிர்க்கவும். கத்தரிக்காய், முளைகட்டிய பீன்ஸ், கொய்யாப்பழம், வாழைப்பழம், சீதாப்பழம், அன்னாசி, வறுத்த உணவு, கடல் உணவு, இனிப்புகள், தயிர், ஊறுகாய் – இவற்றை தவிர்க்கவும். எள்ளை சிறிதளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து வலிக்கும் இடத்தில் பல தடவை தடவவும். இரண்டு தேக்கரண்டி சீரகத்தை பொடித்து ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சவும். ஒரு துணியை இந்த சீரகத் தண்ணீரில் நனைத்து, வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்.

இரவில் படுக்கும் முன்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி, 2-3 ஏலக்காய் போட்டு காய்ச்சிய பாலை பருகவும். இயற்கை வைத்திய முறையில், சுடுதண்ணீரில் இடுப்பு வரை அமிழ்ந்து உட்காருவது வலியை குறைக்கும். இஞ்சியும், மஞ்சளும் ஸியாடிகாவை தவிர்க்கும் இயற்கை மருந்துகளாக கருதப்படுகின்றன. இவற்றை வைத்தியரின் ஆலோசனைப்படி உபயோகிக்க வேண்டும்.

இடுப்பு வலி குறைய சலபாசனம்

சலபாசனம் என்ற யோகாசன முறை இதற்கு நல்ல தீர்வு. முதலில் கைகளை வயிற்றுப் பகுதிக்கு அடியில் வைத்து கைகளின் மேல் படுக்க வேண்டும். பிறகு கைகளை தரையில் அழுத்தி, சுவாசத்தை உள்ளே இழுத்து, இரண்டு கால்களையும் மேலே உயர்த்த வேண்டும்.

20 நொடிகள் சுவாசத்தை அடக்கி வைத்துவிட்டு பின்பு வெளியேற்றி பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இந்தப் பயிற்சியை செய்யும்போது அடி வயிற்றையும் முதுகுத் தண்டின் கீழ் பாகத்தையும் நினைக்க வேண்டும்.

சலபாசனம் இதயத்தையும் ஜீரண உறுப்புகளையும் பலப்படுத்துகிறது. மேலும் முதுகுத் தண்டின் வளையும் தன்மையும் அதிகரிக்கும்.

Leave a Reply