காவல்துறையினரை கலங்கடிக்கும் வாட்ஸ்அப்!

whatsappசமீபத்தில் காவல்துறை உயரதிகாரி ஒருவரின் கிளுகிளுப்பான பேச்சு வாட்ஸ் அப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது முதல் காவல்துறையினர்களுக்கு வாட்ஸ் அப் என்றாலே அலர்ஜியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

“முன்பெல்லாம் காவல்துறையில் என்ன நடந்தாலும் அது உடனடியாக வெளியில் தெரியாது. அந்தளவுக்கு ரகசியங்கள் பாதுகாக்கப்படும். சில தகவல்கள் மட்டும் பத்திரிகைகள் மூலம் மக்களுக்குத் தெரியும். ஆனால், இப்போது தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தகவல்கள் உடனுக்குடன் பரிமாறப்படுகின்றன. குறிப்பாக காவல்துறையில் எது நடந்தாலும் அது மூலைமுடுக்கெல்லாம் பரவும் நிலை உள்ளது. சமீபகாலமாக வாட்ஸ்அப் மூலம் தவறு செய்த காவல்துறை உயரதிகாரிகளின் ரகசியங்கள் வெட்ட வெளிச்சமாகி வருகிறது. இது பலருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.  பழிவாங்கும் படலமாகவே வாட்ஸ்அப்பை பலர் பயன்படுத்தி வருகின்றனர்.

இரண்டு பேருக்கு இடையே அரங்கேறும் உரையாடல் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியில்லாமல் எப்படி மற்றவர்களுக்கு பகிர முடியும் என்பது கேள்வி. பாதிக்கப்பட்டவர்களுடன் கைகோர்த்துக் கொண்டு காவல்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கிலேயே வாட்ஸ்அப்பில் இந்த வன்மங்கள் வெளிப்படுத்தப்படுவதாக கருதப்படுகிறது. இத்தகைய கறுப்பு ஆடுகள் குறித்த விவரங்கள் காவல்துறையினருக்குத் தெரியும். அவர்களை களையெடுத்தால் வாட்ஸ்அப் மூலம் தகவல்கள் பகிருவது தடுக்கப்படும்” என்றார்.
 

வாட்ஸ்அப் விவகாரத்தில் அடிக்கடி காவல்துறையினர் சிக்குவதால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக இப்போது எந்த தகவல்களையும் செல்போனில் பெரும்பாலான காவல்துறையினர் பகிரிந்து கொள்வதில்லை. முன்பு போல வாக்கி டாக்கியிலேயே தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. முக்கியமான விஷயங்கள் மட்டுமே செல்போனில் பேசப்படுகின்றன. அதுவும் நம்பிக்கையுள்ளவர்களிடம் மட்டுமே சில அதிகாரிகள் மனம் திறந்து பேசுகின்றனர். மற்றப்படி நேரில் அழைத்து தகவல்கள் பரிமாறப்படுகின்றன. இந்த தகவல்கள் வெளியில் தெரிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறை உயரதிகாரிகள் தயாராக இருக்கிறார்கள்.

அடுத்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக வாட்ஸ் அப்பில் உள்ள தங்களுடைய (ப்ரோபைல்) புகைப்படத்தையும் அகற்றி விட்டு அதில் இயற்கை படங்கள், சாமி படங்கள் என அப்டேட் செய்திருக்கிறார்கள் காவல்துறையில் பலர். வாட்ஸ்அப்பில் புகைப்படம் இருந்தால் அதை எளிதில் டவுன்லோடு செய்து எதற்கு வேண்டும் என்றாலும் மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதை தவிர்க்கவே இந்த யோசனை என்கிறார்கள் காவல்துறையினர். மேலும் சில அதிகாரிகள் அலுவலக செல்போன் நம்பரில் வாட்ஸ்அப் வசதியை பயன்படுத்துவதை தவிர்த்துள்ளனர். தங்களுடைய பெர்சனல் நம்பரில் மட்டுமே வாட்ஸ்அப் வசதியை வைத்திருக்கிறார்கள். அதன்மூலம் நம்பிக்கையானவர்களுக்கு மட்டும் தகவல்களை பரிமாறிக் கொள்கிறார்கள்.

இப்போது காவல்துறையினரின் லேட்டஸ்ட் வாட்ஸ்அப் பகிர்வாக ஒரு பெண் இன்ஸ்பெக்டரின் லஞ்ச விவகாரம் உள்ளது. ஆனால் அந்த பதிவு சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்கிறார்கள் காவல்துறையினர். தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் சிக்கி வருவதால் இதை பகிர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கடமை தவறிய காவல்துறையினருக்கு தங்களது விவகாரமும் எப்போதும் வாட்ஸ்அப்பில் வலம் வரலாம் என்ற திகிலிலோடு காணப்படுகின்றனர். அதே நேரத்தில் நேர்மையோடு பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் இன்று நெஞ்சை நிமிர்த்தி வீர நடைபோடுகின்றனர். காவல்துறையில் மட்டுமல்லாமல் அனைத்து அரசு துறையிலும் கறைப்படிந்த கைகள் கொண்ட அதிகாரிகள், ஊழியர்களை வாட்ஸ்அப் உடனடியாக அம்பலப்படுத்திவிடுகிறது. இதற்காக வாட்ஸ்அப் வசதிக்கு ராயல் சல்யூட் அடிக்க வேண்டிய தருணம். அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் இவர்களின் தில்லுமுல்லு செயல்கள் வாட்ஸ்அப் மற்றும் சமூகவலைத்தளங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வருவது ஓரளவு அநீதிக்கு சாவு மணி அடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

‘உப்பு திண்னவன் கண்டிப்பாக தண்ணீரை குடிக்க வேண்டும்’ என்பதைப் போல தவறு செய்த காவல்துறையினர் வாட்ஸ்அப்பில் சிக்காமலிருந்தாலும் மனசாட்சி என்ற கடவுளுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

Thanks to vikatan.com

Leave a Reply