இந்தியாவின் தலைநகரம் என்ற பெருமையை பெற்றுள்ள புதுடில்லியில் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அங்கு குழந்தைகளின் நிலைமையும் பரிதாபகரமாக உள்ளதாக தற்போது திடுக்கிடும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் மட்டும் கடந்த மூன்று மாதங்களில் 1,120 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
நாளொன்றுக்கு முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போய் வருவதாகவும், இதில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகளை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளதாகவும் டெல்லி போலீஸ் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.
அதிலும் குறிப்பாக ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே அதிக எண்ணிக்கையில் காணாமல் போயுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 621 பெண் குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக புகார்கள் வந்துள்ளன.
கடந்த 2013ஆம் ஆண்டில் 5,809 குழந்தைகளும், 2012ஆம் ஆண்டில் 2,686 குழந்தைகளும் காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து டெல்லி மாநில காவல்துறை இணை ஆணையர் ரவீந்திரா சிங் யாதவ் அவர்கள் கூறும்போது, “காணாமல் போனவர்களின் புகார்கள் மீது நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளை டெல்லி நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. இப்புகார்களில் எங்களுடன் இணைந்து 10-க்கும் மேற்பட்ட அமைப்புகள் தீவிர தேடலில் ஈடுபடுகின்றன. இதற்காக ‘ஆபரேஷன் மிலாப் (மீண்டும் இணைவதற்கான நடவடிக்கை)’ என்ற பெயருடன் தனி போலீஸ் படை இயங்கி வருகிறது” என்றார்.