கலாநிதி மாறன் – காவேரி கலாநிதி தயாநிதி மாறன் சொத்துக்கள் முடக்கம். மத்திய அரசு அதிரடி

sun networkஏர்செல் – மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம் குறித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய  அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் குழுமத்தின் தலைவருமான கலாநிதி மாறன் மற்றும் சன் டைரக்ட் நிறுவன மேம்பாட்டாளரும் கலாநிதி மாறனின் மனைவியுமான காவேரி கலாநிதி உள்பட இவர்களுக்கு சொந்தமான குடும்ப நிறுவனங்களின் ரூ.742.54 கோடி அளவிலான சொத்துகளை முடக்கி வைத்து மத்திய அமலாக்கத் துறை நடவடிக்கை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக விரைவில் டில்லி சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணியில் மத்திய அமலாக்கத் துறை ஈடுபட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கில் கோடிக்கணக்கில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதால், அது தொடர்பான சட்டப் பிரிவின் கீழ், அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அவரது நிறுவனத்தில் நிர்வாகிகளாக உள்ள காவேரி கலாநிதி மற்றும் ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த விவகாரத்துடன் தொடர்புடைய மாறன் சகோதரர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களின் சொத்துகளில் ரூ.742.54 கோடி அளவுக்கான சொத்துகளை நேற்று முடக்கி வைத்து மத்திய அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அமலாக்கத் துறை விசாரணை: இத் தகவலை உறுதிப்படுத்திய அத்துறையின் உயரதிகாரி ஒருவர் கூறியபோது, “ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ தொடர்ந்துள்ள வழக்கில் மாறன் சகோதரர்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக விசாரணை நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தொடர்புடைய இந்த விவகாரம் குறித்து மத்திய அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தி வருகிறது. இதில், ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் முடிந்தவுடன் 2007-இல் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறனுக்காக, அவரது சகோதரர் கலாநிதி மாறன் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த சன் டைரக்ட் டிவி நிறுவனம், சௌத் ஏசியா எஃப்எம் நிறுவனம் ஆகியவற்றில் மோரீஷஸ் நாட்டில் உள்ள நிறுவனங்கள் மூலம் ரூ.742 கோடி அளவுக்கு மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்தது தெரியவந்தது.

சன் டைரக்ட் டிவி நிறுவனத்தில் 80 சதவீதப் பங்குகளை அதன் மேம்பாட்டாளர்களான கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி ஆகியோர் வைத்திருப்பது தெரிய வந்தது.

இதேபோல, சௌத் ஏசியா எஃப்எம் நிறுவனத்தில் சன் டிவி நிறுவனம் 60 சதவீதப் பங்குகளையும், மோரீஷஸ் நாட்டைச் சேர்ந்த ஏ.எச். மல்டிசாஃப்ட் நிறுவனம், சௌத் ஏசியா மல்டி மீடியா டெக்னாலஜீஸ் நிறுவனம் ஆகியவை தலா 20 சதவீதப் பங்குகளையும் வைத்திருந்தன. “கல்’ கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் கலாநிதி மாறன் 90 சதவீதப் பங்குகளையும், காவேரி கலாநிதி 10 சதவீதப் பங்குகளையும் வைத்துள்ளனர். இதன் அடிப்படையில் அவர்களுடைய சொத்துகளில், ஏர்செல் – மேக்சிஸ் ஒப்பந்த விவகாரத்துடன் தொடர்புடைய ரூ.742 கோடி அளவிலான சொத்துகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்’ என்றார் அந்த அதிகாரி.

 முடக்கப்பட்ட சொத்துகள் விவரம்

தயாநிதி மாறன் உள்ளிட்டோரின் வைப்பு நிதி ரூ. 7.46 கோடி

சன் டைரக்ட் டிவி நிறுவனம் வைப்பு நிதி ரூ. 31.34 கோடி

சௌத் ஏசியா எஃப்எம் ரூ. 6.19 கோடி

சௌத் ஏசியா எஃப்எம் பரஸ்பர நிதி ரூ. 15.14 கோடி

கலாநிதி மாறன் வைப்பு நிதி ரூ. 100 கோடி

கலாநிதி மாறனின் பரஸ்பர நிதி ரூ. 2.78 கோடி

காவேரி கலாநிதி பரஸ்பர நிதி ரூ. 1.30 கோடி

காவேரி கலாநிதியின் வைப்பு நிதி ரூ. 1.78 கோடி

கல் கம்யூனிகேஷன் நிறுவனம் ரூ. 171.55 கோடி

சன் டிவிக்கு சொந்தமான நிலம், கட்டடம் ரூ. 266 கோடி

சன் டைரக்ட் டிவியில் கலாநிதி மாறனின் பங்குகள் மதிப்பு ரூ. 139 கோடி

Leave a Reply