நடுக்கடலில் உயிரை கையில் பிடித்து கொண்டு 66 நாட்கள் தத்தளித்த மீனவர். பெரும் பரபரப்பு

fishermanஅட்லாண்டிக் கடலில் மீன் பிடிக்க சென்ற ஒருவர் படகு கவிழ்ந்ததால் அந்த படகில் சென்றவர் கவிழ்ந்த படகின் மீது ஏறி நின்று 66 நாட்கள் உயிருக்காக போராடியவாறு இருந்துள்ளார். இந்த நாட்களில் அவர் மழை நீர் மற்றும் பச்சை மீன்களை மட்டுமே உணவாக கொண்டு வாழ்ந்ததாகவும், 66 நாட்களுக்கு பின்னர் அந்த வழியாக சென்ற கப்பல் ஒன்று அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

லூயிஸ் ஜோர்டான் என்ற 37 வயது மீனவர் ஒருவர் தனது படகில் அட்லாண்டிக் கடலில் மீன் பிடிக்க கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் சென்ற படகு திடீரென கடலில் தலைகீழாக கவிழ்ந்துள்ளது. ஆனாலும் சுதாரித்துக்கொண்ட ஜோர்டான் கவிழ்ந்த படகின் மீது ஏறிக்கொண்டு அந்த பக்கம் ஏதாவது படகு அல்லது கப்பல் வருகிறதா? என்று நீண்ட நேரம் எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால், அவரது துரதிஷ்டம் எந்த கப்பலும் அந்த வழியாக வரவில்லை.

ஜோர்டான் மீன்பிடிப்பதற்குரிய சாதனங்களை வைத்திருந்ததால் மீன்களை பிடித்து கவிழ்ந்த படகு மீது போட்டார். ஓரிரு நாட்கள் கடந்தபின்னரும், அந்த பக்கம் எந்த கப்பலும் வரவில்லை. சரி முடிந்த வரை வாழ்வோம் என்று தீர்மானித்த ஜோர்டான், தான் பிடித்து வைத்திருந்த மீன்களை பச்சையாகவே சாப்பிட ஆரம்பித்தார். அந்த நேரம் மழையும் பெய்ததால் தண்ணீரைப் பிடித்து குடித்து வந்துள்ளார்.

இப்படி 66 நாட்கள் தனது வாழ்நாளை கஷ்டப்பட்டு கழித்துள்ளார். 66-வது நாள் ஜெர்மன் நாட்டு கொடியுடன் ஒரு பெரிய எண்ணெய் கப்பல் அந்த வழியாக வந்துள்ளது. இதைப்பார்த்த ஜோர்டான் தனது கைகளில் வைத்திருந்த பொருட்கள் மூலம் சைகை காண்பித்தார். இதை எப்படியோ அந்த கப்பலில் உள்ள ஒருவர் பார்த்து விட்டார்.

உடனே அவர்கள் அமெரிக்க கடற்படைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வடக்கு கரோலினாவில் இருந்த 200 மைல் தொலைவில் கவிழ்ந்த படகில் சிக்கித் தவித்த ஜோர்டானை ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

‘ஜோர்டான் கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி மாயமானார். அதனைத் தொடர்ந்து நாங்கள் போலீசில் புகார் அளித்தோம். ஜோர்டான் உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்து. அவர் பிழைத்து வந்தது மகிழ்ச்சி’ என்று உறவினர்கள் கூறினார்கள்.

Leave a Reply