கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பேட்மிண்டன் தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த இந்திய வீராங்கனை சாய்னா நேவல், இன்று நடைபெற்ற மலேசிய ஓபன் பேட்மிண்டன் அரையிறுதி ஆட்டத்தில், சீன வீராங்கனை லீ ஜெரோயிடம் சாய்னா நேவால் தோல்வியடைந்ததால் தரவரிசையில் அவரது முதலிடத்தை பரிதாபமாக இழந்தார்.
கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை தொடர்ந்து 119 மாதங்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த லீ ஜெரோய் கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற இந்தியன் ஓபன் தொடரில் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. இதனால் 7800 புள்ளிகளை அவர் இழந்த நிலையில், இந்திய வீராங்கனை சாய்னா நேவால், இந்திய ஓபன் தொடரில் கோப்பையை வென்றதோடு தரவரிசையில் முதலிடம் பிடித்தும் புதிய சாதனையை நிகழ்த்தினார். உலக பேட்மிண்டன் வரிசையில் முதலிடம் பிடித்து அசத்திய ஒரே இந்திய வீராங்கனை சாய்னா நேவால்தான்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற மலேசிய ஓபன் அரையிறுதி ஆட்டத்தில், பலம்வாய்ந்த லீ ஜெரோயிடம் 13-21, 21-17 22-20 என்ற புள்ளி கணக்கில் சாய்னா வீழ்ந்தார். இதனால் அரையிறுதிக்கு முன்னேறிய வகையில் 80 ஆயிரத்து 191 புள்ளிகளுடன் சாய்னா திருப்திபட்டுக் கொள்ள வேண்டியதாகி விட்டது.
அதேவேளையில் லீ ஜெரோய் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றதால், தற்போது 80 ஆயிரத்து 764 புள்ளிகளை பெற்றுள்ளார். இதனால் தரவரிசையில் லீ ஜெரோய் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி விட்டார்.இதற்கிடையே கடந்த வாரம் தரவரிசையில் சாய்னா நேவால் முதலிடம் பிடித்ததற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்றுதான் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.