கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலையில் சம்மந்தப்பட்டிருந்ததாக வந்த தகவலை அடுத்து அமைச்சர் பதவியை இழந்த அக்ரி.கிருஷ்ணமூர்த்தி இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்
வேளாண்மைத் துறையில் பணியாற்றிய பொறியாளர் முத்துக்குமாரசாமி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. இதனால் அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா, அவரை அமைச்சர் பதவியில் இருந்தும் கட்சியின் பதவியில் இருந்தும் அதிரடியாக நீக்கினார்.
இந்நிலையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து விசாரணை செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தன.
விசாரணைக்காக நேற்று இரவு எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் இரவு முழுக்க தீவிர விசாரணை நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை 5.00 மணியளவில் அவரை கைது செய்த போலீசார், நெல்லைக்கு அழைத்துச் சென்றனர்.
அவருடன் வேளாண் துறை பொறியாளர் செந்தில் என்பவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து, நெல்லை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக நெல்லையைச் சேர்ந்த மேலும் 3 முக்கிய புள்ளிகள் இன்று மாலைக்குள் கைதாகலாம் என்றும் வரும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்துறையில் டிரைவர் பணி நியமனம் செய்த போது கொடுக்கப்பட்ட நெருக்கடியால் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இச்சம்பவத்திற்கு பின்னணியில் அதிமுக பிரமுகர்கள் முத்துக்குமாரசாமியை மிரட்டியதாகவும் அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் இன்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.