நீதிபதிகளை பொதுமக்கள் கடவுளுக்கு நிகராக நம்புவதால், நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை வழங்கும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என பாரத பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய சட்ட அமைச்சகம் சார்பில் டெல்லி விஞ்ஞான் பவனில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதல்வர்கள் மாநாட்டை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்து பேசிய பிரதமர் மோடி:
“கடவுளுக்கு அடுத்த நிலையில் நீதித்துறையை தான் மக்கள் நம்புகின்றனர். எனவே, புலனறிவு மூலம் தீர்ப்புகள் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். தீர்ப்புகள் வழங்கும்போது மிக கவனமாக இருக்க வேண்டும்.
ஒரு காலத்தில் கிசுகிசு பகுதியில் கூட இடம்பெறாத செய்திகள் எல்லாம் இப்போது ‘பிரேக்கிங் நியூஸ்’ ஆக வெளியிடப்படுகின்றன. அரசியல்வாதிகளை ஊடகங்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசியல்வாதிகள் மக்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்.
அரசியல்வாதிகளை மக்கள் கண்காணிக்கின்றனர். எங்களை எடை போடுகின்றனர். அரசியல்வாதிகளுக்கு ஏராளமாக அவப்பெயர்கள் உள்ளன. அரசியல்வாதிகளாக இருந்தாலும் எங்களைக் கண்காணிக்க பல சட்ட அமைப்புகள் உள்ளன. தேர்தல் ஆணையம், தகவல் அறியும் உரிமை சட்டம், லோக்பால் போன்றவை அரசியல்வாதிகளைக் கண்காணித்து வருகின்றன. ஆனால், நீதித்துறைக்கு அந்த நிலை இல்லை. எனவே, நீதித்துறை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
அரசியல்வாதிகள் அதிகளவு விமர்சனங்களுக்கு உள்ளாகின்றனர். நீதித்துறைக்கு அந்த நிலை இல்லை. எப்போதாவதுதான் விமர்சனம் எழுகிறது. நீதித்துறை பலமுள்ளதாக உள்ளதால், மக்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப சரியானதாகவும் உருவாக வேண்டும்.
ஒருவருக்கு நீங்கள் மரண தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கினாலும், அதைக் கேட்டு விட்டு வெளியில் வரும் அந்த நபர், ‘நீதித்துறை மீது நம்பிக்கை வைத்துள்ளேன்’ என்றுதான் கூறுவார். எனவே, நீதித்துறை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
நீதித்துறை மீது சிறிதளவு நம்பிக்கை குறைந்தாலும், ஒட்டுமொத்த நாட்டையும் அது பாதித்து விடும். அரசியல்வாதிகளோ அல்லது அரசுகளோ தவறு செய்தால், நீதித்துறை மூலம் அதை சரிசெய்து கொள்ளலாம். ஆனால், நீதித்துறையே தவறு செய்தால், எல்லாம் முடிந்த கதையாகி விடும்.
சட்டங்கள் சில நேரங்களில் மிகச் சரியாக உருவாக்கப்படுவதில்லை. அதனால் பல விளக்கங்கள் அளிக்கும் நிலை உள்ளது. காலத்துக்கு ஒவ்வாத பல சட்டங்களை நீக்கி வருகிறோம். 1,700 சட்டங்கள் இன்றைய கால சூழலுக்கு ஒத்துவராதவை என்று கண்டறியப்பட்டுள்ளன. என்னுடைய பதவி காலத்துக்குள் இந்தச் சட்டங்களை ரத்து செய்ய முயற்சிப்பேன்.
நீதித்துறைக்கு சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கு பாஜக தலைமையிலான அரசு முன்னுரிமை வழங்கும். இதற்காக 14-வது நிதிக் கமிஷன் ரூ.9,749 கோடி ஒதுக்கி உள்ளது. இந்த நிதியை மாநில அரசுகள் வேறு எதற்கும் பயன்படுத்த கூடாது. நீதித்துறை மேம்பாட்டுக்கு மட்டும் மாநில அரசுகள் பயன்படுத்தும் என்று நம்புகிறேன்.
தொழில்நுட்பங்கள் மூலம் நீதித்துறை மேம்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நீதிபதிகள் ஆலோசனை வழங்க வேண்டும். லோக் அதாலத் சிறந்த வழியாக உள்ளது. இதை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
இந்த நேரத்தில் அரசுகளால் உருவாக்கப்படும் தீர்ப்பாயங்கள் தேவையா என்பதை பரிசீலனை செய்ய வேண்டும். தீர்ப்பாயங்களில் உள்ள வழக்குகளில் குறைந்த அளவே முடித்து வைக்கப்படுவது கவலை அளிக்கிறது.
இந்தத் தீர்ப்பாயங்கள் வழக்குகளை விரைந்து முடிக்க பயன்படுகின்றனவா அல்லது வழக்குகளை தாமதப்படுத்துகின்றனவா என்பது மூத்த நீதிபதிகள் ஆராய வேண்டும். பட்ஜெட்டில் தீர்ப்பாயங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை, நீதிமன்றங்களைப் பலப்படுத்த பயன்படுத்தலாம். இப்போது சில அமைச்சகங்களின் கீழ் தலா 4 தீர்ப்பாயங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் தீர்ப்பாயங்களின் எண்ணிக்கை 100-ஐ தொட்டுவிட்டது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.