கோலிவுட்டில் பெரிய ஹீரோவாகிவிட்டால் அதற்கு அடுத்த ஸ்டெப் அரசியல் கட்சி தலைவராகிவிடுவதுதான். எம்.ஜி.ஆரின் வெற்றி இன்னும் பல பெரிய நடிகர்களின் மனதில் பதிந்துள்ளதால் தங்களை அடுத்த எம்.ஜி.ஆராக நினைத்து கொண்டு முதல்வர் நாற்காலியை நோக்கி கனவு கொண்டு இருக்கின்றனர்.
இந்த வரிசையில் ஏற்கனவே களமிறங்கி தத்தளித்து கொண்டிருக்கும் விஜயகாந்த், அரசியல் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் இளையதளபதி விஜய், இவர்களை அடுத்து தற்போது அந்த வரிசையில் புதிதாக இணைந்திருப்பவர் புரட்சி தளபதி விஷால்.
இதுவரை ரசிகர் மன்றங்களாக இருந்த தனது அமைப்பை தற்போது நற்பணி இயக்கமாக மாற்றியுள்ளார். நேற்று சென்னையில் தமிழகத்தில் உள்ள தனது அனைத்து ரசிகர் மன்றங்களையும் இணைத்து ஒரு விழாவை நடத்தி அந்த விழாவில் குழந்தைக்கு பெயர் வைப்பது முதல் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது வரை ஆவேசமாக பேசி ரசிகர்களை உசுப்பேற்றிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புரட்சி தளபதியின் இந்த நடவடிக்கை இளையதளபதியை அதிர்ச்சி அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு வருடங்களில் அரசியலில் நுழையலாம் என்ற கனவுடன் இருந்த விஜய்க்கும் தற்போது திடீரென ஒரு திடீர் தலைவர் தோன்றியுள்ளது அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் வரவழைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விஷாலுக்கு இளையதலைமுறை நடிகர்கள் முதல் சீனியர் நடிகர்கள் வரை சப்போர்ட் இருப்பதால் அரசியலில் நுழைவதில் விஷால் தன்னை முந்திவிடுவாரோ என்பதுதான் இளையதளபதியின் கவலை என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.