கமல்ஹாசன் படம் என்றாலே சர்ச்சைக்கு பின்னர்தான் வெளியாகும் என்பதற்கு தேவர் மகன், விருமாண்டி, விஸ்வரூபம் என பல உதாரணங்கள் உள்ளது. அந்த வரிசையில் தற்போது அவர் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள உத்தமவில்லன் திரைப்படமும் இணைந்துள்ளதாக அஞ்சப்படுகிறது. உத்தம வில்லன் திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கோரி, தமிழ்நாஅடு காவல்துறை ஆணையரிடம், தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற இந்து அமைப்பு மனு அளித்துள்ளது. இதனால் படக்குழுவினர்கள் இடையே பெரும் பரபரப்பு காணப்படுகிறது.
காவல்துறை ஆணையரிடம் அளிக்கப்பட்டுள்ள அந்த மனுவில், ”நடிகர் கமல்ஹாசன் மற்றும் எம்.லிங்குசாமி இணைந்து வழங்கும், ரமேஷ் அரவிந்த் இயக்கி வெளிவர இருக்கும் உத்தம வில்லன் என்ற திரைப்படத்தில் இந்து மதக் கடவுளான பெருமாளின் அவதாரங்களான தசாவதாரத்தை விமர்சித்து இருப்பதை தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம்.
பக்த பிரகலாதன், அவரது தந்தை இரணியன் உடனான உரையாடலை, வில்லு பாட்டாக ‘என் உதிரத்தின் விதை…’ என்னும் தொடங்கும் பாடல் வரியில் மிகைப்படுத்தி, பெருமாள் அவதாரத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பாடல் அமைந்துள்ளது. இது கோடிக்கணக்கான பெருமாள் பக்தர்களின் மனதை புண்படுத்தும் செயல்.
தொடர்ந்து இந்து மத எதிர்ப்பு கருத்துக்களால் தன்னை நாத்திகனாக காட்டிக்கொள்ளும் கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன் படத்தை திரையிட்டால் இந்துக்களின் மனம் புண்படுத்தும் விதமாக அமையும். எனவே, அந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டுகிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது.
காவல்துறை இந்த மனு மீது எவ்வித நடவடிக்கை எடுக்கும் என தெரியாத நிலையில் இந்த படம் தேதி மே 1 ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த படம் ஏப்ரல் 2 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.