ஆந்திர வனத்துறையினர்களின் என்கவுண்டரில் 10 தமிழர்கள் உள்பட 20 பேர் பலி. பெரும் பரபரப்பு

andhra encounterதமிழர்களை ஒரு பக்கம் இலங்கை மீனவர்களும், சிங்கள படையினர்களும் தாக்கி வரும் நிலையில் மறுபக்கம் ஆந்திர வனப்பகுதியிலும் தமிழர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். இந்த வகையில் உச்சகட்டமாக இன்று ஆந்திர மாநிலம் சித்தூரில் செம்மரங்களை வெட்டியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10-க்கும் மேற்பட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதியில் உள்ள சேஷாசலம் என்ற வனப்பகுதியில் ஸ்ரீவாரிமெட்டு எனும் இடத்திலிருந்து விலைமதிப்பு மிக்க செம்மரங்கள் நாள்தோறும் கடத்தப்படுவதாக ஆந்திர வனத்துறையினர்களுக்கு தகவல் வந்தது. இதனைத் தடுக்க ஆந்திர காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் இன்று தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வந்தபோது நடந்த என்கவுன்டரில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இறந்தவர்களில் ஒருவர் சர்வதேச செம்மரக் கட்டை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்றும் தமிழகத்தில் உள்ள வேலூர், திருவண்ணாமலை, சேலம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து செம்மரங்களை வெட்டி கடத்த கூலி தொழிலாளர்கள் அனுப்பி வைத்தவர் என்றும் கூறப்படுகிறது. செம்மரங்களை வெட்டி கடத்த நாள் ஒன்றுக்கு வெட்டுக்கூலியாக ரூ.2000 முதல் ரூ.5000 முதல் கிடைப்பதால் தமிழக கூலித் தொழிலாளர்கள் செம்மரம் வெட்ட சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த என்கவுண்டர் சம்பவம் குறித்து போலீஸ் டி.ஜி.பி. கன்டா ராவ் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, “காலை 5 மணியளவில் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டியவர்களை போலீஸார் சுற்றி வளைத்தனர். வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கொள்ளையர்களும், கூலித் தொழிலாளர்களும் இருந்துள்ளனர். அப்போது, பயங்கர ஆயுதங்களுடன் போலீஸார் தாக்க கடத்தல் கும்பல்காரர்கள் முயற்சித்தனர். தற்காப்புக்காக போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர் இதில் 20 பேர் பலியாகினர்.

தமிழக தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விசாரணை நடத்தாமல், துப்பாக்கிச் சூடு நடத்தியது கண்டனத்துக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply