ஆந்திர மாநிலம் திருப்பதி அருகேயுள்ள சேஷாசலம் என்ற மலைப்பகுதியில் 20 தமிழர்கள் ஆந்திரக் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகியுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஆந்திர மாநிலம் சேஷாசலம் மலைப்பகுதியில் 20 தமிழர்கள் ஆந்திரக் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகியுள்ளன. இது எதிர்பாராமல் நடந்த மோதலின் விளைவு அல்ல…. திட்டமிட்டு நடத்தப்பட்ட போலி மோதல் படுகொலைகள் என்று நம்புவதற்குத் தேவையான அனைத்து ஆதாரங்களும் வெளியாகியிருக்கின்றன.
சேஷாசலம் மலைப்பகுதியில் உள்ள ஈதலகுண்ட, சீக்கட்டி தீகலகோண ஆகிய இடங்களில் தான் இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அப்பகுதியில் இருந்த செம்மரங்களை வெட்டிக் கடத்தும் முயற்சியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்; அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது, கற்களை வீசியதால் தற்காப்புக்காக சுட்டோம் என்று ஆந்திரக் காவல்துறையினர் கூறுவதை ஏற்க முடியாது. ஏனெனில், தொழிலாளர்கள் சுட்டுகொல்லப்பட்ட இடங்களில் ஒன்றான ஈதலகுண்டு பகுதியில் செம்மரங்களே கிடையாது. அதுமட்டுமின்றி அப்பகுதியில் புதர்களைத் தவிர வேறு எதுவும் கிடையாது. அப்பகுதியில் தொழிலாளர்கள் செம்மரம் வெட்டினார்கள் என்றும், காவல்துறையினர் சென்றபோது மறைந்திருந்து கற்களை வீசித் தாக்கினார்கள் என்பதும் பொய்களால் புனையப்பட்ட கட்டுக்கதை என்பதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
கொல்லப்பட்ட தொழிலாளர்கள் வெட்டி வீழ்த்தியதாக கூறி பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் அனைத்து பல ஆண்டுகள் பழமையானவை ஆகும். பழைய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட அந்தக்கட்டைகளை அங்கு போட்டு காவல்துறையினர் நாடகம் ஆடியுள்ளனர். அக்கட்டைகளில் பழைய வழக்கு எண் எழுதப்பட்டிருப்பதும், அதை மறைக்கும் நோக்குடன் அவற்றின் மீது காவல்துறையினர் பெயிண்ட் பூசியிருப்பதுமே இது நாடகம் என்பதை வெட்ட வெளிச்சமாக்கும். பழையக் கட்டைகளா… புதிய கட்டைகளா? என்பதைக் கூட பார்க்காமல் இந்த படுகொலைகள் குறித்த தங்களின் கருத்தை விசாரணை அதிகாரிகள் நம்பிவிடுவர் என்று காவல்துறையினர் கருதிகிறார்கள் என்றால் அவர்களின் படுகொலைகளுக்கு ஆந்திர அரசும், அதன் விசாரணை அதிகாரிகளும் எந்த அளவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.
மோதலின்போது தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தால் அவர்களது உடலின் பல பகுதிகளில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த காயம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொல்லப்பட்ட 20 பேருக்கும் மார்பு மற்றும் நெற்றியில் தான் குண்டு பாய்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, மிகவும் நெருக்கத்தில் வைத்து அவர்களது உடலில் குண்டு பாய்ச்சப்பட்டிருக்கிறது. அவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நெருக்கமாக நிற்கவைத்து தான் சுட்டுக் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தை இவை உறுதி செய்கின்றன. தொழிலாளர்களின் உடல்களில் நெருப்புக் காயங்களும் காணப்படுவதால் கொல்லப்படுவதற்கு முன்பு அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது.
ஆந்திரக் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படைத் தலைவரான காந்தராவ், கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழகக் காவல்துறை அதிகாரிகளுக்கு எழுதியிருந்த கடிதத்தில், தமிழகத் தொழிலாளர்கள் ஆந்திராவுக்கு செம்மரம் வெட்ட வந்தால் அவர்களைச் சுட்டுக் கொல்வோம் என்று எச்சரித்திருந்தார். தமிழகத் தொழிலாளர்களை சுட்டு கொல்ல வேண்டும் என்ற வெறி அவருக்கு இருந்ததையே இது காட்டுகிறது. அதுமட்டுமின்றி, தமிழர்களை சுட்டுக்கொல்ல முடிவு செய்துவிட்டு, அதற்கான காரணத்தை உருவாக்குவதற்காகக் கூட இப்படி ஒரு கடிதத்தை காந்த ராவ் எழுதியிருக்கக் கூடும்.
கொல்லப்பட்ட தொழிலாளர்களின் உடல்கள் காவல்துறையினரால் கையாளப்பட்ட விதம் இன்னும் கொடுமையானது. விலங்குகளின் உடல்களை எடுத்து வருவதைப் போல மூங்கிலில் கட்டித் தொங்கவிடப்பட்ட நிலையில்தான் தொழிலாளர்களின் உடல்கள் கொண்டு வரப்பட்டன. ஒரு குறிப்பிட்ட தொலைவுக்குப் பிறகு அசுத்தமான டிராக்டரில் ஒன்றின் மீது ஒன்றாக உடல்களைப் போட்டு குப்பையைப் போல அள்ளிச் சென்றுள்ளனர். படுகொலைகள் நடந்த இடத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் செல்வதற்கு பாதை உள்ளது. அப்பாதையில்தான் பத்திரிகையாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவ்வாறு இருக்கும்போது, தமிழகத் தொழிலாளர்களின் உடல்களை மிக மோசமான முறையில் ஆந்திரக் காவல்துறையினர் கையாண்டது அவர்களின் மனதில் புதைந்து கிடக்கும் தமிழகத் தொழிலாளர்களுக்கு எதிரான வன்மத்தையும், வெறுப்பையும்தான் காட்டுகின்றன.
ஏற்கனவே நான் கூறியதைப்போல சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் அனைவரும் அதிக கூலிக்கு ஆசைப்பட்டு போன அப்பாவிகள்தான். ஆந்திரத்தைச் சேர்ந்த மாஃபியா கும்பல்கள்தான் செம்மரங்களை கடத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. அவர்களுக்கு ஆந்திரத்திலுள்ள அனைத்துக் கட்சி அரசியல்வாதிகளுடனும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இந்தக் கூட்டணி ஆந்திர வனத்தை மொட்டையடித்து வருகிறது. இதை மூடி மறைக்கவே அப்பாவித் தமிழர்களைக் கொன்று கடத்தல்காரர்களாக சித்தரித்து தங்களை உத்தமர்களாகக் காட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
தமிழகத் தொழிலாளர்கள் 20 பேரும் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் தெளிவாக இருப்பதால், அதன் அடிப்படையில் சிறப்பு அதிரடிப்படைத் தலைவர் காந்தாராவ் உள்ளிட்ட காவல்துறையினர் மீது கொலை மற்றும் கூட்டுச் சதி வழக்குத் தொடர்ந்து கைது செய்ய வேண்டும். ஆந்திர அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைகள் குறித்து அம்மாநில அரசே விசாரிப்பது முறையாக இருக்காது. எனவே, இது பற்றி உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரிக்க வேண்டும்.
தமிழக தொழிலாளர்கள் கொல்லப்பட்ட விஷயத்தில் தமிழக அரசு அலட்சியமாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதை, பிகார் மாநில அரசு தேசிய பிரச்னையாக்கியது. இப்போது, 20 தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் நியாயமான விசாரணை நடத்தும்படி ஆந்திரத்திடம் தமிழகம் கெஞ்சுகிறது. இது தவறான அணுகுமுறையாகும். உடனடியாக குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரின் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்று தமிழர்களின் படுகொலைக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி உள்ளார்.