[carousel ids=”60268,60270,60267″]
உடுமலை : உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம், கொட்டும் மழையில், நேற்று கோலாகலமாக நடந்தது. திருப்பூர் மாவட்டம், உடுமலை மாரியம்மன் கோவில், தேர்த்திருவிழா, கடந்த மார்ச் 24ல், நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. தேர்த்திருவிழாவின், முக்கிய நிகழ்வான, தேரோட்டம், நேற்று மாலை நடந்தது. இதனையொட்டி, நேற்று காலை, 6:30 மணிக்கு, அம்மன் நீலப்பட்டு உடுத்தி, சூலத்தேவர் சுவாமியுடன், திருத்தேருக்கு எழுந்தருளினார். மாலை 4.25 மணிக்கு, மேள, தாளங்கள் முழங்க, பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்ப, அலங்கார திருத்தேர், வடம் பிடிக்கப்பட்டது.நான்கு புறங்களிலும் திரண்டிருந்த பக்தர்கள் மத்தியில், தேர் அசைந்தாடி சென்றது. தேர் வடம் பிடிக்கப்பட்ட, சிறிது நேரத்தில், சாரலாக துவங்கிய மழை, தீவிரமடைந்தது. இதனால், கொட்டும் மழையில், தேர் நகர்ந்தது. பழநிரோடு, தளிரோடு, குட்டைத்திடல், தங்கம்மாள் ஓடை, தல கொண்டம்மன் கோவில் வழியாக, மாலை தேர் நிலையை அடைந்தது.
கோவில் வளாகம் முதல், தேர் வலம் வந்த பாதைகளில் குவிந்திருந்த, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், தேரில் பவனி வந்த அம்மனை வழிபட்டனர். தேரோட்ட வீதியில், இருந்த கட்டடங்களில், நின்று அம்மனுக்கு மலர் துாவி, பக்தர்கள் வழிபட்டனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால், உடுமலை நகரே விழாக்கோலம் பூண்டிருந்தது. பக்தர்கள் தாகம் தணிக்க, நீர் மோர் பந்தல், வழியெங்கும் அமைக்கப்பட்டிருந்தது. விழாவையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.விழாவில், இன்று இரவு 8:00 மணிக்கு, பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு 10:00 மணிக்கு, வாணவேடிக்கையும் நடக்கிறது.