அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் இருந்து வெளிவரும் டைம் என்ற புகழ்பெற்ற பத்திரிகை சர்வதேச அளவிலான ‘செல்வாக்கு மிகுந்த’ 100 பேர் கொண்ட பட்டியலை நேற்று வெளியிட்டது. இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த நரேந்திர மோடி, அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
டைம்ஸ் பத்திரிகை இணையதளத்தின் மூலம் நடத்திய இந்த கருத்துக் கணிப்பின் முடிவை அந்த இணையதளத்தின் உரிமையாளர் நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டார். இந்த பட்டியலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். மேலும் இந்த பட்டியலில் ராப் இசைப் பாடகிகள் லேடி காகா, ரிஹானா, டெய்லர் ஸ்விஃப்ட், அமெரிக்க அதிபர் ஒபாமா, அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன், தலாய் லாமா, எம்மா வாட்சன், மலாலா, சீன அதிபர் ஜீ ஜிங்பிங், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் கும் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய பிரதமர் மோடிக்கு 0.6 சதவீத ஆதரவு வாக்குகளும் 34 சதவீத எதிர்ப்பு வாக்குகளும் பதிவாகியிருந்தது. அதேபோல் காங்கிரஸ் மற்றும் பாஜகவை தோற்கடித்து டெல்லியில் 2-வது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு 0.5 சதவீத ஆதரவு வாக்குகளும் 71 சதவீத எதிர்ப்பு வாக்குகளும் பதிவாகின. இந்தியாவின் மிகப் பெரிய இரண்டு தேசிய கட்சிகளை வீழ்த்தி தலைநகர் மாநிலத்தில் ஆட்சியை பிடித்து சாதனை செய்தவர் அரவிந்த் கெஜ்ரிவால் என டைம் பத்திரிகை அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.