ஈராக் மற்றும் சிரியாவில் தீவிரவாத செயல்கள் மூலம் அந்நாடுகளின் அரசுகளை கடும் நெருக்கடிக்கு ஆளாக்கி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அவ்வப்போது திடுக்கிடும் வீடியோக்களை வெளியீட்டு உலக மக்களுக்கு அதிர்ச்சியை தருவார்கள். இந்நிலையில் நேற்று அவர்கள் வெளியிட்ட 11 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்றில் ‘அமெரிக்காவை எரிப்போம்’ என்று முழக்கமிட்டுள்ளனர். இதனால் அமெரிக்கா உள்பட உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
நேற்று வெளியான அந்த திடுக்கிடும் வீடியோவில் முகமூடி அணிந்த ஒரு தீவிரவாதி கூறியதாவது: “புவியியல் ரீதியாக மிகவும் பாதுகாப்போடு இருப்பதாக அமெரிக்கா நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இவை அனைத்துமே அமெரிக்கர்களின் கனவுதான். வெறும் பிம்பமாக இருக்கும் இதுவும் வெகு சீக்கிரம் மறையும். இன்று உலகில் எங்கும் அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு இல்லை.
அதிக வளங்கள் இல்லாத முஜாகுதீன்கள் அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை தாக்குதல் நடத்தி தகர்த்தனர். அந்த நிகழ்வு அமெரிக்காவுக்கு மரண அடியாக இருந்தது. அதேபோல மற்றொரு முறை அமெரிக்கா எரியக் கூடியத் தருணம் வந்துவிட்டது.
தற்போது அமெரிக்கா பாதுகாப்பாக இருப்பதற்காக பல பில்லியன்களை செலவழித்து வருகிறது. ஆனால் இவை அனைத்துக்கும் விலை கொடுக்கக் கூடிய நேரம் வந்துவிட்டது”
இவ்வாறு அந்த வீடியோவில் கூறப்பட்டிருந்தது.