மேற்கு நாடுகள் போல இணைய சமவாய்ப்பு சட்டத்தை இந்தியாவில் கொண்டு வர வேண்டும் என்றும் அப்போதுதான் இணையத்தில் சமவாய்ப்பைக் காப்பாற்ற முடியும் என்றும் பாமக எம்.பி.யும் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் முழு விபரம் வருமாறு:
“இணையத்தில் சமவாய்ப்பு என்கிற தற்போதைய நிலையை மாற்ற தனியார் செல்பேசி நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான இந்த சதித் திட்டத்திற்கு இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஒருபோதும் துணை போகக் கூடாது.
இப்போது இணையத்தில் விரும்பும் தகவலைப் பெறுவதற்கும், விரும்பும் இணையப் பக்கத்தை பார்ப்பதற்கும் வாடிக்கையாளர்களுக்கு சமவாய்ப்பு இருக்கிறது. இதனை மாற்றி பணம் படைத்த நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், தொலைதொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையம் மக்கள் கருத்துக் கேட்புக்கான வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் சில இணையப் பக்கங்களை மட்டுமே பார்க்கச் செய்தல், சில இணையப் பக்கங்களை மட்டுமே வேகமாக அளித்தல், சில இணையப் பக்கங்களுக்கு கட்டணம் விதித்தல் – என்கிற புதிய நடைமுறையைத் திணிக்க டிராய் அமைப்பு முயற்சிக்கிறது. செல்பேசிகளில் இயங்கும் செயலிகளில் (App) சிலவற்றுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க முயற்சிக்கிறது.
எதிர்காலத்தில் செல்பேசிகள் வழியாகவே மிக அதிக அளவில் இணையம் பயன்படுத்தப்படும் என்பதால், செல்பேசி வழியாக வழங்கப்படும் சேவைகளில் இந்த விதிமுறைகளைத் திணிக்க டிராய் முயற்சிக்கிறது.
செல்பேசிகள் மூலம் இணையத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதற்கு கட்டணம் செலுத்துகின்றனர். இந்நிலையில், இணையத்தை அளிக்கும் நிறுவனங்களிடமும் கட்டணம் பெற்றுக்கொண்டு – பணம் கொடுக்கும் இணைய நிறுவனங்களின் தகவலை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் செயல் ஏற்கக் கூடியது இல்லை.
டிராய் அமைப்பின் இந்த நடைமுறை செயலுக்கு வந்தால் – இணையத்தில் எல்லா தகவலும் சமமாக கிடைக்காது. பணம் கொடுக்கும் பத்திரிகைகள், நிறுவனங்கள், அரசியல் அமைப்புகளின் தகவல் மட்டுமே மக்களுக்கு வழங்கப்படும்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான கருத்துரிமை, பேச்சுரிமை என்பது தகவல்களை தடையின்றி பெரும் மக்களின் அடிப்படை உரிமையையும் உள்ளடக்கியிருக்கிறது. டிராயின் புதிய முயற்சி இந்த அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானதும் ஆகும்.
பணம் படைத்த பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் இணையத்தில் மேலோங்கச் செய்யும் ‘டிராய்’ அமைப்பின் முயற்சி கைவிடப்பட வேண்டும். இதற்கு மாறாக, இணையத்தில் எந்த ஒரு நிறுவனத்தின் இணையதளத்திற்கும் முன்னுரிமை அளிக்கும் அனைத்துவிதமான நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
வாடிக்கையாளர்கள் கட்டணம் என்பது ஒட்டுமொத்த இணையதள சேவைக்குமானதாக இருக்க வேண்டுமே தவிர, ஒவ்வொரு இணையதளத்துக்கும் தனிக்கட்டணம் என்கிற முறையை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.
இணையத்தில் சமவாய்ப்பைக் காப்பாற்ற பிரேசில், சிலி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் சட்டம் கொண்டுவந்துள்ளன. அதே போன்று மக்களின் தகவலுக்கான உரிமையைக் காக்கும் வகையில் இந்திய அரசும் இணையத்தில் சமவாய்ப்பு சட்டம் (Net Neutrality law) நிறைவேற்ற வேண்டும்” இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.