நேற்று முன் தினம் 21 பெண்களுக்கு தாலி அகற்றும் நிகழ்ச்சி சென்னையில் திராவிட கழகத்தினர்களால் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பெருவாரியான பெண்கள் அமைப்பு மற்றும் அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு, பட்டும் படாமலும் ஒரு குழப்பமான கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகை குஷ்பு தெரிவித்த கருத்து இதோ: “பெரியார் காலத்தில் இருந்தே தாலி பற்றிய விவாதம் நடந்து வருகிறது. திராவிடர் கழகத்துக்கு ஒரு கொள்கை இருக்கிறது. அதன்படி அவர்கள் நடக்கிறார்கள். தினமும் தாலி கட்டிக்கொள்ளும் திருமணங்கள் நடைபெறுகின்றன. அவற்றை திராவிடர் கழகத்தினர் தடுத்து நிறுத்தவில்லை. தாலி கட்டும் முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தங்கள் கருத்தை பதிவு செய்யும் விதத்தில்தான் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.
தாலி கட்டுவதும், மறுப்பதும் முழுக்க முழுக்க ஒரு தனி நபரின் விருப்பம். தாலி கட்டிக்கொள்ளலாமா? கூடாதா? என்பதும் தனிநபர் விருப்பம் சம்பந்தப்பட்டது. திராவிடர் கழகம் நடத்திய நிகழ்ச்சி சரியா? தவறா? என்பது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் விதத்தில் நிகழ்ச்சி நடத்துகிறார்கள். அதை ஏன் மற்றவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்? இது ஜனநாயக நாடு இதை வைத்து சமூகத்தில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தக் கூடாது” என்று கூறியுள்ளார்.
தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கருத்து கூறாமல், தாலி கட்டிக்கொள்வதற்கு ஆதரித்தும் கருத்து கூறாமல் ஒரு குழப்பமான கருத்தை தெரிவித்துள்ள குஷ்புவுக்கு சமூக வலைத்தளங்களில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.