பாரத பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளின் அரசுமுறை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நேற்று முன் தினம் இரவு கனடா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பருடன் மோடி நடத்திய முக்கிய பேச்சுவார்த்தைக்கு பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர். இதன்படி இந்தியாவுக்கு கனடா சுமார் ரூ.1,600 கோடி மதிப்பீட்டிலான யுரேனியம் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த யுரேனியம் இந்தியாவின் எரிசக்தி பற்றாக்குறையை போக்க உதவும் என்று பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட ‘கிளிப்பெண்’ என்ற கற்சிலை சில ஆண்டுகளுக்கு முன் கனடாவுக்கு கடத்தப்பட்டது. இந்த கற்சிலையை கனடாவை சேர்ந்த ஒருவரிடம் இருந்து பறிமுதல் செய்து கடந்த நான்கு ஆண்டுகளாக பாதுகாப்பாக பத்திரப்படுத்தியிருந்த கனடா நேற்று பிரதமர் மோடியிடம் வழங்கியது. கனடிய பிரதமரிடம் இருந்து சிலையை பெற்றுக்கொண்ட மோடி இந்தியாவின் பாரம்பரிய சிற்பத்தை கனடா ஒப்படைத்ததற்கு தனது நன்றியை டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
900 வருடங்கள் பழமையான இந்த நடன நங்கை சிலை இந்தியாவில் உள்ள கஜுராஹோ கோயிலுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.