வியாக்ரபாத முனிவரின் மகனான உபமன்யு, பாற்கடல் தனக்கு வேண்டுமெனக் கூறி சிவனை நோக்கி தவம் செய்யப் போவதாகத் தந்தையிடம் கூறினான். வியாக்ரபாதரும் சிவாயநம என்னும் மந்திரத்தை உபதேசித்து அனுப்பி வைத்தார்.
அவனும் காட்டுக்குச் சென்று தவமிருந்தான். தவமிருந்த சிறுவனை சோதிக்க எண்ணிய சிவன், இந்திரனைப் போல வடிவெடுத்து வந்தார்.
“சிறுவனே! கொடிய மிருகங்கள் நடமாடும் இக்காட்டில் தவம் புரியும் உனக்கு பயமாக இல்லையா?” என்றார்.
“”எமனைக் காலால் உதைத்த சிவனின் பக்தன் நான். விலங்குகள் என்னை ஒன்றும் செய்து விட முடியாது,” என தைரியமாகச் சொன்னான் உபமன்யு.
“”எதற்காக தவம் இருக்கிறாய்?” என்றார் இந்திரன் வடிவில் வந்த சிவன்.
“”அதை உங்களிடம் கூற முடியாது. என் விருப்பத்தை சிவனிடம் மட்டுமே கூற முடியும்,” என்றான் சிறுவன்.
“”சிறுவனே! சுடுகாட்டில் திரியும் பித்தனான அவனால், உனக்கு என்ன தர முடியும்? என் போன்ற தேவர்களைக் குறித்து தவம் செய்தால் உன் விருப்பம் நிறைவேறும். இல்லாவிட்டால், உன் முயற்சி வீணாகி விடுமே!” என்றார் சிவன்.
சிவநிந்தனையைக் கேட்ட உபமன்யு கோபத்துடன் தண்டிக்க ஆவேசமாக எழுந்தான். மறைவாக நின்ற நந்திகேஸ்வரர் அவனைத் தடுக்க ஓடி வந்தார். அப்போது இந்திர வடிவில் வந்த சிவன் அர்த்தநாரீஸ்வரராக உமாதேவியை ஒரு பக்கம் தாங்கி காட்சியளித்தார்.
உபமன்யு மகிழ்ந்தான். பாற்கடலை பூமிக்கு வரவழைத்த சிவன் அவனிடம் அதை ஒப்படைத்தார்.