நெய்வேலியில் இருந்து சென்னை வந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததால் பரபரப்பு.

bus accidentசென்னை மீனம்பாக்கம் அருகே மெட்ரோ ரயில் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தனியார் பஸ் ஒன்று விழுந்து கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் அந்த பேருந்தில் பயணம் செய்த 35 பயணிகள் காயம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நெய்வேலியில் இருந்து சென்னைக்கு நேற்று காலை வந்த தனியார் பேருந்து ஒன்று  சென்னை மீனம்பாக்கம் அருகே வந்தபோது முன்னாள் சென்ற ஆட்டோ ஒன்றை பேருந்து ஓட்டுனர் சாமுவேல் முந்த முயற்சி செய்தார். அப்போது அந்த ஆட்டோ டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் ஆட்டோ மீது பேருந்து மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுனர் திடீரென பேருந்தை திருப்பி பிரேக் போட்டார். ஆனால் நேற்று முன் தினம் பெய்த மழையால் சாலையில் தண்ணீரும் சகதியும் தேங்கியிருந்ததால் பிரேக் பிடிக்காமல் பேருந்து சில தூரம் வழுக்கி சென்றது.

இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து, சாலை ஓரத்தில் இருந்த இரும்பு தடுப்பை இடித்துத் தள்ளி, மெட்ரோ ரயிலுக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் முன்பக்கமாக கவிழ்ந்தது. இந்த விபத்தால் பேருந்தில் பயணம் செய்த 35 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் மீட்புக்குழுவினர் உதவியுடன் அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்ட்டு ஆட்டோ மற்றும் கால் டாக்ஸியில் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து ஏற்பட்டதும் பேருந்து ஓட்டுனர் அங்கேயே பேருந்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து மீனம்பாக்கம் போக்குவரத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் ஜிஎஸ்டி சாலையில் சுமார் 2 மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Leave a Reply