தற்போது நாம் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கின்றோமோ அதே வங்கியில் அல்லது அந்த வங்கியின் வேறு கிளைகளில் மட்டும்தான் நமது கணக்கில் பணம் டெபாசிட் செய்ய முடியும். ஆனால் விரைவில் எந்தவொரு வங்கியில் இருந்தும் நாட்டின் வேறு எந்த வங்கிக் கணக்கிலும் பணம் செலுத்தும் புதிய முறை நடைமுறைக்கு வரவுள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதற்காக பொது இயந்திரங்களை அமைக்கும் பணியில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் இந்த முறை அமலுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
தற்போது வங்கிகளில் பணம் செலுத்த வரிசையில் நிற்பதை தவிர்க்க இயந்திரங்கள் வைக்கப்பட்டு அதன் மூலம் கணக்குகளில் பணம் செலுத்தும் வசதியை பல வங்கிகள் செய்துள்ளது. இருப்பினும் அந்த இயந்திரங்களில் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளில் மட்டுமே பணம் செலுத்த முடியும். வேறு வங்கியில் உள்ள கணக்கில் பணம் டெபாசிட் செய்ய முடியாது.
இந்நிலையில் அனைத்து வங்கிக் கணக்குகளையும் கையாளும் வகையில் பொதுவான பணம் செலுத்தும் இயந்திரத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்த கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கையை பரிசிலித்த இந்திய ரிசர்வ் வங்கி தற்போது பணம் செலுத்தும் பொது இயந்திரம் தயாரிக்க உள்ளது. இதுகுறித்து மும்பையில் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் எச்.ஆர்.கான் கூறும்போது, ”ஏ.டி.எம். மையங்களில் பொதுவாகப் பணம் எடுக்ககும் வசதி தற்போது உள்ளது. அதேபோல், எந்தவொரு வங்கியில் இருந்தும் நாட்டின் வேறு எந்த வங்கிக் கணக்கிலும் பணம் செலுத்தும் நடைமுறையையும் கொண்டு வருமாறு ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
அதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிதாக ஒரு தொழில்நுட்ப முயற்சியை அறிமுகப்படுத்தும்போது, அதைக் கொண்டு லாபம் ஈட்டுவது அவசியம். இல்லாவிட்டால், அத்தகைய புதிய முயற்சிகள் மேற்கொள்ளபடமாட்டாது. அதேபோல், பொதுவான பணம் செலுத்தும் இயந்திரத் திட்டமும் முதலில் லாபம் ஈட்டும் நோக்கத்துடன் தான் செயல்படுத்தப்படும்” என்றார்.